"நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்".. கதை அல்ல நிஜம் (2வது பகுதி)

Su.tha Arivalagan
Sep 25, 2026,10:37 AM IST

- ஸ்வர்ணலட்சுமி


"ஏர்போர்ட்டில் என் மனதை உருக்கிய இரு காட்சிகள்" எனும் தலைப்பில் நேற்று உருக்கமான முதல் காட்சியை படித்து விட்டோம்.. தற்போது இரண்டாம் காட்சியை உங்களுடன் பகிர்வதில் மன ஆறுதல் அடைகிறேன் வாசகர்களே!..


ஏர்போர்ட்டில் தன் தந்தை வினோத் வெளிநாட்டிற்கு செல்லும் பொழுது அவருடைய 10 வயது மகள் சுபிக்ஷா அழுது கதறியதை நான் பார்த்த நாள் முதல் இன்று வரை மன வருத்தத்துடன் இருக்கிறேன். ஏனெனில், அந்த சிறுமிக்கு ஒரு கண் பார்வை  கிடையாது.ஒரு கண் மங்கலாக தெரியும். காரணம் அவள் எட்டு வயது இருக்கும் பொழுது ஒரு சாலை விபத்தில் கண் பார்வையை இழந்து விட்டாளாம்.


குடும்பத்தினர் என்னிடம் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் இவை...


வினோத் ஒரு சாதாரண மெக்கானிக் வேலை பார்க்கும் இளைஞர். அவருக்கு வயதான அப்பா, அம்மா,ஒரு தங்கை, மனைவி, மகள் சுபிக்ஷா இந்த ஆறு பேர் சேர்ந்தது வினோத்தின் குடும்பம். அவருடைய வருமானம் வீட்டு வாடகை கொடுக்கவும், மாதாந்திர செலவுக்குமே சரியாக இருந்தது. ஒரு பைசா கூட சேமிக்க இயலவில்லை. 




இதில் அவனுடைய அப்பா,அம்மாவிற்கு மருத்துவ செலவு ஒரு புறம், தங்கையின்  கல்லூரி படிப்பு மற்றொருபுறம், கண்பார்வையற்ற தன் குழந்தை  என்று, எந்த வேதனையை விடுவது, எந்த வேதனையை எடுத்துக் கொள்வது என்று தெரியாமல் புரியாமல் வாழ்ந்து கொண்டிருந்தான். அவனால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. எப்படியாவது நாம் காசு சேர்க்க வேண்டும், நிறைய சம்பாதிக்க வேண்டும்.நம் குடும்பத்தை அடுத்த ஒருபடியாவது  உயர்ந்த நிலைமைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று வினோத் முயற்சி செய்து கொண்டே இருந்தான்.


தன் நண்பரின் உதவியுடன் ஏசி மெக்கானிக் வேலையை செவ்வனே கற்றுக் கொண்டான். மெக்கானிக் வேலை மட்டுமல்லாது, எலக்ட்ரீசியன், பிளம்பர், மூன்றையும் இரவு பகல் பாராமல் தன் நண்பர்களுடன் சேர்ந்து வேலை செய்து ஒவ்வொன்றையும் கற்றுத் தேர்ந்தான். கிடைக்கும் வேலையெல்லாம் செய்து கொண்டிருந்தான் வினோத்.


தன் மகளின் கண்பார்வை செக்கப்பிற்கு கண் மருத்துவமனைக்கு மாதம் இருமுறை செல்வான். அந்த நாள் அவனுக்கு ஒரு நம்பிக்கையூட்டும் வகையில் ஒரு செய்தி கிடைத்தது.. அது என்னவென்றால் தன் மகளை பரிசோதிக்கும் கண் மருத்துவர் கூறியதாவது, "வெளிநாட்டிலிருந்து எங்கள் மருத்துவமனைக்கு சிறந்த ஸ்பெஷலிஸ்ட் கண் மருத்துவர் வருகிறார்,அவரிடம் உங்கள் மகளை அழைத்து  வாருங்கள் வினோத்,  பரிசோதித்து விட்டு அவர் என்ன கூறுகிறார் என்பதை பார்ப்போம் என்று  மருத்துவர் கூறினார். அதைக் கேட்டதும் வினோத்திற்கு மனதில் ஆயிரம் சிறகுகள் பறந்தன. 


தன் மகளுக்கு கண்பார்வை கிடைத்துவிடும் எனும் நம்பிக்கை பெருகியது. அவன் மிகுந்த மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு சென்று தன் குடும்பத்தாருடன் இந்த செய்தியை பகிர்ந்தான். அனைவரும் இறைவனிடம் நன்றி கூறி இறைவா!எங்கள் குழந்தைக்கு கண் பார்வையை திருப்பிக் கொடுத்து விடு என்று மன்றாடி வேண்டிக்கொண்டன ராம். ஆனால் மருத்துவ செலவிற்கு  அதிக பணம் தேவைப்படுகிறது. இனி எப்படி நாங்கள் பணம் புரட்டுவோம் என்று எங்களுக்கே தெரியவில்லை அம்மா... என்று சுபிக்ஷாவின் பாட்டி அழுது கொண்டே கூறினார்.


அதற்காகத்தான் அம்மா என் மகன் வினோத் வெளிநாட்டிற்கு சென்று வேலை பார்க்க செல்கிறான். அங்கு சென்றால் அதிக பணம் ஈட்டலாம் என்று அவனுடைய நண்பர் கூறிய அறிவுரையின்படி கடன் வாங்கி பாஸ்போர்ட் & விசா எல்லாம் எடுத்து மூன்று வருட அக்ரீமெண்ட்படி ஒரு கம்பெனியில் வேலை கிடைத்து, இன்று வெளிநாட்டிற்கு கிளம்பி விட்டான் அம்மா.


வினோத்தின் மகள் சுபிக்ஷா தன் தந்தை கிளம்பும்போது அப்பா... நான் என் 8 வயது வரை உங்களைப் பார்த்து, அணைத்து தொட்டுப் பார்த்து வளர்ந்தேன். பிறகு எனக்கு விபத்து நேர்ந்ததும் என் பார்வை பறிபோயிற்று. என்னால் பார்க்க இயலவில்லை என்றாலும் உங்களை தொட்டுப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் மிகவும் பாதுகாப்பாக உணர்கிறேன். உங்களுடைய கை அரவணைப்பில் நான் வளர்வதை பெருமிதமாக நினைக்கிறேன் அப்பா...


ஆனால் இன்று எனக்காக கடல் கடந்து சென்று பணம் சம்பாதிக்க செல்கிறாயே ! அப்பா...  இனி நான் மூன்று வருடங்கள் கழித்து தானே அப்பா உன்னை தொட்டுப் பார்க்க இயலும். எனக்கு கண் பார்வை வரவில்லை என்றாலும் பரவாயில்லை அப்பா, என்னை விட்டுப் போகாதே அப்பா.. என்று கதறி அழுதாள்.  துடிதுடித்துப் போனாள். 


கடைசி நொடி வந்தது. வினோத் செக்கின்  செய்யும் நேரம் வந்தது. அவனும் அழுது கொண்டு உள்ளே சென்றான். குடும்பத்தினர் அனைவரும் அழுதனர். சுபிக்ஷா அப்பா... அப்பா.. அப்பா.... என்று கதறிய காட்சி மனதை  பதை பதைக்க  வைத்தது.


இறைவா!என்ன உன் விளையாட்டு. வினோத் மூன்று வருடத்தில் பணம் சம்பாதித்து தன் மகளின் பார்வையை மீட்க வேண்டும். அந்தக் குடும்பத்திற்கு அருள் புரிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டு, சுபிக்ஷாவிடம் சென்று, கண்ணே.. உன் அப்பா சீக்கிரம் வந்து விடுவார். நீயும் சரியாகி விடுவாய் என்று கூறிவிட்டு, நான் ஏர்போர்ட்டில் இருந்து கிளம்பி விட்டேன்.


முதல் காட்சியில் சுந்தரி வெளிநாட்டிற்கு சென்ற மகனைக் கண்டு வருந்துகிறாள். இங்கு சுபிக்ஷா தன் தந்தையை பிரிந்து  வேதனை அடைகிறாள்.


இந்த இரு குடும்பத்திற்கும் மன தைரியமும், வலிமையும் கிடைக்க பெற்று வெற்றி பெற வேண்டும். எல்லாம் வல்ல இறைவனை உங்களுடன் சேர்ந்து நானும் வேண்டிக்கொள்கிறேன்.


"நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்."


மேலும் இது போன்ற சுவாரஸ்யமான சிறிய கதைகளுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள். தென் தமிழுடன் எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி