மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்! சுற்றுப்புறச் சூழலை பாதுகாப்போம்!
Jun 05, 2026,05:58 PM IST
- புரட்சிப் பாவை தே. ஜெனிட்டா ரீனா
ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினம்.
உலகில் பறவைகளும், பூச்சிகளும், விலங்குகளும் இல்லாத உலகத்தை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? கிளி வளர்த்தேன்; பறந்து போனது !அணில் வளர்த்தேன்; ஓடிப்போனது! ஆனால் மரம் வளர்த்தேன். இரண்டும் திரும்பி வந்தது .. இதைச் சொன்னது ஏவுகணை நாயகன் ஏபிஜே அப்துல் கலாம்.
நம்மைச் சுற்றியுள்ள இடமே சுற்றுப்புறச் சூழல். இத்தகைய இயற்கை கொடுத்த அருங்கொடையை சுற்றுப்புறச் சூழலை பாதுகாப்பதே நமது தலையாய கடமை. ஆனால் நாம் அதற்கு மாறாக சுற்றுப்புற சூழலுக்கு அதிகப்படியான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறோம். இதனால் நம்முடைய அன்றாட வாழ்வியலில் எதிர்மறையான மாற்றங்கள், நாம் எதிர்பார்க்காத நேரத்தில் நிகழ்கின்றன!!!
ஆசையே துன்பத்திற்கு காரணம் என்றார் புத்தர். மனிதனின் அதிகப்படியான ஆசையினால் பிளாஸ்டிக் கழிவுகளினால் சுற்றுப்புறச் சூழல் சீர்கேடு அடைகிறது. இதனால் மண்வளம் பாதிக்கப்படுகிறது. கடல்வாழ் உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன. மரங்கள் வெட்டப்படுவதால் மழை பொழிவது தள்ளிப் போகிறது. தூய்மையான காற்று கிடைப்பது அரிதாகிறது. வெப்பச் சமநிலையில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் கடலின் நீர்மட்டம் அதிகமாகிறது. பனிப்பாறைகள் உருகுகின்றன.
சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்க நாம் அனைவரும் வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும். இருக்கின்ற மரங்களை பாதுகாக்க வேண்டும். இதுவே வாழ்வியலின் அடிப்படை. உணவுச் சங்கிலி விடுபட்டால் நாம் எதிர்பாராத மாற்றங்களை வேளாண்மை முதல் அனைத்திலும் சந்திக்க நேரிடும் !!!
ஆகவே நமக்கு ஏற்படக்கூடிய மிகப்பெரிய பாதிப்புகளில் இருந்து விடுபட நாம் சுற்றுப்புறச் சூழலை தூய்மையாகவும் பசுமையாகவும் வைத்திருக்க குழந்தைகளிடம் சுற்றுப்புற சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவோம் ! அதன் அவசியத்தை அவர்களுக்கு புரிய வைப்போம்!
இன்றைய குழந்தைகள்; நாளைய எதிர்காலம் !!!
மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்! சுற்றுப்புறச் சூழலை பாதுகாப்போம்!
புவி வெப்பமயமாதலை தடுப்போம்!