குஜராத்தில்.. 30 நிமிடங்களாக இளைஞரை தரையில் அழுத்திப் பிடித்த சிங்கம் - பதறவைக்கும் வீடியோ
பவநகர், குஜராத்: குஜராத் மாநிலம் பவநகர் மாவட்டத்தில் உள்ள பாலினாதா தாலுகாவின் கராஜியா கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது.
தனது வீட்டின் அருகே பசுக்களுக்கு தீவனம் போட்டுக் கொண்டிருந்த காலுபாய் போகாபாய் பர்மர் என்ற கால்நடை வளர்ப்பவர் மீது சிங்கம் ஒன்று திடீரென பாய்ந்து தாக்கியது. காயமடைந்து கீழே விழுந்த அந்த நபரை, சிங்கம் தரையில் அழுத்திப் பிடித்துக் கொண்டு, காலை இறுக்கமாகவும், கையை தன் தாடையிலும் கவ்விப் பிடித்துக் கொண்டது. ரத்தக் காயங்களுடன் இருக்கும் அந்த மனிதர் சிங்கத்திடமிருந்து தப்பிக்க தொடர்ந்து போராடுகிறார்.
அவரைச் சுற்றியுள்ள கிராம மக்கள் சிங்கத்தை விரட்ட சத்தமிட்டு, பல்வேறு வழிகளில் முயற்சித்த போதிலும், சிங்கம் சுமார் 30 நிமிடங்களுக்கு அவரை விடாமல் அப்படியே பிடித்து வைத்திருந்தது. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, கிராம மக்கள் அவரை மீட்டனர். போகாபாயை விட்டதும், அருகில் கட்டப்பட்டிருந்த பசுவை நோக்கி அந்தச் சிங்கம் வேகமாக நகர்ந்தது.
சிங்கத்திடமிருந்து மீட்கப்பட்ட காலுபாய் உடனடியாக பாலினாதா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் நடந்த உடனே வனத்துறைக்கு தகவல் தெரிவித்தும் அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வரவில்லை என பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரும், கிராம மக்களும் குற்றம் சாட்டியுள்ளனர். இப்பகுதியில் மனித-விலங்கு மோதல்களைத் தடுக்கவும், தங்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் வனத்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.