ஓம்பிர்லாவை சபாநாயகர் பதவியிலிருந்து நீக்க தீர்மானம்: மார்ச் 9 அன்று லோக்சபாவில் முக்கிய நகர்வு

Su.tha Arivalagan
Mar 07, 2026,05:18 PM IST

புதுடெல்லி: மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவை அந்தப் பதவியிலிருந்து நீக்குவதற்கான தீர்மானத்தின் மீதான தீர்மானம், வரும் திங்கள்கிழமை மார்ச் 09ம் தேதியன்று மக்களவையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. இதனால் நாடாளுமன்ற வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் வேளையில், எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து சபாநாயகர் ஓம்பிர்லாவின் செயல்பாடுகள் குறித்துப் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தன. குறிப்பாக, எதிர்க்கட்சி உறுப்பினர்களை இடைநீக்கம் செய்தது மற்றும் விவாதங்களுக்குப் போதிய நேரம் ஒதுக்கவில்லை என்பது உள்ளிட்ட புகார்களை முன் வைத்து, அவரைப் பதவியிலிருந்து நீக்கக் கோரி எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் அளித்தன.நாடாளுமன்ற விதிமுறைகளின்படி, சபாநாயகரை நீக்குவதற்கான தீர்மானம் கொண்டு வரப்படுவதற்கு முன்னதாக, அது குறித்த அறிவிப்பு சபையில் தாக்கல் செய்யப்பட வேண்டும்.


இதனால் வரும் திங்கள்கிழமை இதற்கான முறையான அறிவிப்பு மக்களவையில் முன் வைக்கப்படும். அதன் பிறகு இந்தத் தீர்மானத்தை சபையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளக் குறைந்தபட்சம் 50 உறுப்பினர்களின் ஆதரவு அவசியமாகும். போதிய உறுப்பினர்களின் ஆதரவு இருக்கும் பட்சத்தில், அடுத்த 10 நாட்களுக்குள் இந்தத் தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படும்.




தற்போதைய அரசியல் சூழலில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் (NDA), 'இந்தியா' (INDIA) கூட்டணிக்கும் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. இத்தகைய சூழலில், சபாநாயகருக்கு எதிரான இந்தத் தீர்மானம் மத்திய அரசுக்கு ஒரு தார்மீக அழுத்தத்தைக் கொடுக்கும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.

இருப்பினும், மக்களவையில் தற்போதைய பாஜக.,வின் பலத்தின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் வெற்றி பெறுவது கடினம் என்றாலும், சபையில் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்ய எதிர்க்கட்சிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளன. திங்கள்கிழமை சபை கூடியதும் இது குறித்த கூடுதல் விபரங்கள் வெளியாகும் என்பதால், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.