சிக்கலில் தொக்கி நிற்கும் ஜனநாயகன்.. இந்த இயக்குநர் கேமியோவில் வர்றாராமே!

Su.tha Arivalagan
Jan 26, 2026,05:07 PM IST

சென்னை: சென்சாரில் சிக்கி படம் வருமா வராதா என்ற கேள்வியில் தொக்கி நிற்கும் ஜனநாயகன் படத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கேமியோ ரோலில் நடித்துள்ளாராம். இதை அவரே சொல்லியுள்ளார்.


தமிழ் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படங்களில் ஒன்று ஜன நாயகன். தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய்யின் கடைசித் திரைப்படம் என்பதால், இந்தப் படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில், இப்படத்தைப் பற்றிய சுவாரசியமான தகவல் ஒன்றை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்.




ஜன நாயகன் திரைப்படத்தில் முன்னணி இயக்குநர்களான அட்லி, லோகேஷ் கனகராஜ் மற்றும் நெல்சன் திலீப்குமார் ஆகியோர் கேமியோ கதாபாத்திரத்தில் (சிறப்புத் தோற்றம்) நடித்துள்ளதாக ஏற்கனவே கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது. இந்தத் தகவல் தற்போது உண்மையென உறுதியாகியுள்ளது.


சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த லோகேஷ் கனகராஜிடம் இது குறித்துக் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், விஜய் அண்ணாவும், இயக்குநர் வினோத் அண்ணாவும் கேட்டுக் கொண்டதற்கிணங்க, ஜன நாயகன் படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளேன். தற்போது இது குறித்து விரிவாகப் பேச முடியாது என்று தெரிவித்துள்ளார். 


இதன் மூலம் படத்தில் அவர் நடித்திருப்பது அதிகாரப்பூர்வமாகத் தெரியவந்துள்ளது. அதேபோல அட்லீ, நெல்சன் ஆகியோரும் இருக்கிறார்களா என்று தெரியவில்லை.


ஜன நாயகன் திரைப்படம் கடந்த ஜனவரி 9-ம் தேதியே திரைக்கு வந்திருக்க வேண்டியது. ஆனால், தணிக்கைச் சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட சில நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிப்போயுள்ளது. எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், விஜய்யின் அரசியல் வருகைக்கு முன்னதாக வெளியாகும் இறுதிப் படம் என்பதால் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.


இதே சந்திப்பில் தனது அடுத்தடுத்த படங்கள் குறித்தும் லோகேஷ் பேசினார். நடிகர் அல்லு அர்ஜுனுடன் ஒரு படத்தில் இணைய உள்ளதாகவும், அதேசமயம் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் கைதி 2 திரைப்படம் கைவிடப்படவில்லை என்றும், அது நிச்சயம் உருவாகும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.