லோகேஷ் கனகராஜை புறக்கணித்தார்களா.. கமலும், ரஜினியும்.. பரபரக்கும் கோலிவுட்!
சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜை மையமாக வைத்து பல தகவல்கள் கோலிவுட்டில் வலம் வருகின்றன. ஆனால் லோகேஷ் கனகராஜ் இதுகுறித்து எதுவும் கருத்துக் கூறவில்லை.
கமல்ஹாசன்- ரஜினிகாந்த் இணையும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக முதலில் தகவல்கள் வெளியாகின. ஆனால் அது இல்லை என்று பின்னர் தகவல்கள் வெளியாகின. லோகேஷை கமல் விரும்பினாலும் கூட ரஜினி அவரை விரும்பவில்லை என்றும் செய்திகள் வெளியாகின. இதனால் ரஜினி சாய்ஸுக்கே இயக்குநர் தேர்வை விட்டு விட்டாராம் கமல். ரஜினியின் சாய்ஸ் நெல்சன் என்று சொல்கிறார்கள். இது ஒரு தகவல்.. உறுதிப்படுத்தப்படாத தகவல்.
அடுத்த தகவல் கமல்ஹாசனும், ரஜினிகாந்த்தும் தன்னைப் புறக்கணிப்பதாக உணர்ந்த லோகேஷ் கனகராஜ், அவர்களை எக்ஸ் தளத்தில் அன் பாலோ செய்து விட்டாராம். இருப்பினும் அவரது எக்ஸ் தளத்தின் டிபியில் இன்னும் கமல்ஹாசனுடன் இருக்கும் படம்தான் இருக்கிறது.
3வது தகவல், அஜீத்துடன் கை கோர்க்க லோகேஷ் கனகராஜ் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. அஜீத்தை சந்தித்து கதையை லோகேஷ் விவரித்து விட்டதாகவும், இதுதொடர்பான பாசிட்டிவான பதிலுக்காக லோகேஷ் காத்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.
கடைசித் தகவல்தான் சுவாரஸ்யமானது.. அதாவது கமல், ரஜினிக்காக வைத்திருந்த கதையைத்தான் அஜீத்திடம் லோகேஷ் விவரித்துள்ளாராம். அதில் அஜீத்துடன் இன்னொரு முன்னணி நடிகரையும் இணைத்து அதிரிபுதிரியாக எடுக்கலாம் என்று அஜீத்திடம் லோகேஷ் நம்பிக்கை கொடுத்துள்ளாராம். அஜீத்துக்குக் கதை பிடித்திருப்பதாகவும், இருந்தாலும் யோசித்து விட்டு சொல்வதாக கூறியுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இதுதான் லோகேஷை சுற்றி வரும் தகவல்கள். ஆனால் இதுவரை லோகேஷ் எதற்குமே ரியாக்ட் செய்யவில்லை. அமைதியாக தனது வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
இதற்கு முன்பு, லோகேஷ் கமல்ஹாசனுடன் 'விக்ரம்' படத்தில் பணிபுரிந்தார். அவரது கடைசியாக இயக்கிய படம் ரஜினி நடித்த 'கூலி'. இதில் விக்ரம் மெகா ஹிட், கூலி அந்த அளவுக்குப் போகவில்லை. விமர்சனங்களும் கூட எழுந்தன. லோகேஷின் இயக்கம் குறித்த கேள்விகளும் கூட எழுந்துள்ளன. அவர் மிகப் பெரிய கம் பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்திலும் உள்ளார்.
தற்போது லோகேஷ் அருண் மாதேஸ்வரன் இயக்கும் 'DC' படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். பவன் கல்யாண் மற்றும் பிரபாஸை ஒரு இரட்டை கதாநாயகன் படத்தில் இணைத்து இயக்கவும் அவர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மறுபக்கம் கமல்ஹாசன் தனது தயாரிப்பில் ரஜினிகாந்த்தையும், சுந்தர்.சியையும் வைத்து ஒரு படம் பண்ணுகிறார். இந்தப் படம் முடிந்ததும், கமல், ரஜினி இணையும் படம் தொடங்கும் என்று சொல்கிறார்கள்.
ரஜினிகாந்த் தனது தரப்பில் ஜெயிலர் 2வைக் கையில் வைத்துள்ளார். எனவே கமலும், ரஜினியும் சளைக்காமல் தங்களது டிராக்கில் ஓடிக் கொண்டுள்ளனர். இந்த டிராக்கில் லோகேஷ் தொடர்கிறாரா அல்லது இல்லையா என்பது காலம்தான் பதில் சொல்ல முடியும்.