திருச்சி தந்த அதிர்ச்சி!
- உமாராணி சிவலிங்கம்
கடந்த திங்கட்கிழமை,10/8/25, எங்கள் சொந்த ஊரான ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் போது நம் காவிரிக் கரையில் அமைந்த திருவானைக்காவில் உள்ள அகிலாண்டேஸ்வரி அம்பாள் உடனுறையும் ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் கோவிலுக்குச் செல்லலாம் என எண்ணி உள்ளே செல்ல உச்சிக்கால பூஜைக்காக சிறிது காத்திருக்கவும் எனக் கூறியதால் பூக்களோடு வரிசையில் காத்திருந்தோம்.
எங்களுக்குப் பின்னால் ஒரு பையன் சுமார் 30 வயதுக்குள் இருக்கும். அங்குமிங்கும் சென்றபடி இருந்தான். அவனுடன் வந்த அவன் தோழன், தோழியை அவனுடன் வரிசையில் வரவைப்பதற்காக. அவர்களும் அவன் வயது தான் இருக்கும். கூட வந்த பெண் வட இந்தியப் பெண். உள்ளே அணிவதை வெளியே அணிந்து பெயருக்கு ஒரு மெல்லிய துப்பட்டா, அதுவும் இரு கைகளில். எனக்கு மிகவும் அதிர்ச்சி. வரிசையில் நின்ற அனைவரின் கண்களும் அவள் மேல் தான்.
நான் அந்தப் பொண்ணைப் பார்த்து துப்பட்டாவை வைத்து மூடிக் கொள்ளம்மா, இது கோவில் என்று ஆங்கிலத்தில் தன்மையாகக் கூற. "I know what I am doing ,I have been to many temple, what is this " என பதிலளித்தாள். நான் அந்தப் பையனிடம் நீங்கள் தமிழர் தானே. நம் கலாசாரம் உங்களுக்குத் தெரியுமல்லவா. நீங்கள் ஏன் உங்களின் தோழிக்குக் கூறக்கூடாது எனக் கூற, நாங்கள் இன்று ஒரு functionக்கு வந்தோம். அப்படியே சும்மா கோவிலுக்கு வந்தோம். எனப் பதிலளித்தனர்.
அடக் கடவுளே ,என்ன இது. நான் அவர்களிடம் நீங்கள் தான் நம் கலாசாரம் பற்றி தெரிந்து மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டும் என அறிவுறுத்தினால் விளையாட்டாக எடுத்துக் கொள்கிறார்களே.. ஜம்புகேஸ்வரா இவர்களுக்கு நல்ல புத்தி கொடு என்று வேண்டி கொண்டேன். பக்கத்தில் இருந்த அனைவரும் வேடிக்கைப் பார்த்தனரே தவிர யாரும் பதிலளிக்கவில்லை. அந்தப் பெண் அனைவரின் கண்களுக்கும் விருந்தானாள். கடைசிவரை அவள் அப்படியே தான் இருந்தாள்.
அது எனக்குச் சில நாட்களுக்கு முன்பு கம்போடியா சென்று வந்த நிகழ்ச்சியை ஞாபகப்படுத்தியது. கம்போடியாவில் உள்ள அரண்மணைக்குச் சென்ற போது வெளியே dress Code என்று போட்டு முழங்கால் மறைக்கும் வரையும் மேலே தோள்பட்டை,மேல் கைகளை மறைக்கும் ஆடையும் அணிந்தால் தான் உள்ளே செல்ல முடியும் என்று கூறி,எங்களுக்கு முன்னால் அரைகுறை ஆடையுடன் சென்ற வெளிநாட்டினருக்குக் கீழேயும் ,மேலேயும் மூட துணி கொடுத்து உள்ளே இருக்கும்வரை கட்டாயம் அதை அணிந்திருக்குமாறு கூறினார்கள். நாங்கள் புடவைக் கட்டிச் சென்றதை வரவேற்றனர். எங்களுடன் வந்தவர்களில் சிலர் வேஷ்டி அணிந்தும் வந்தனர். ஆனால் கலாசாரத்தில் பழமையும், பெருமையும், சிறப்பும் மிக்க நம் கோவில்களில் நாம் இதைக் கடைப்பிடிக்கலாமே.
அதேக் கோவிலில் கைபேசி பேசக்கூடாது, உள்ளே கொண்டு செல்லக் கூடாது எனப் பெரிய எழுத்துகளில் எழுதி board அங்கங்கே வைத்து நுழையும் இடத்தில் லாக்கர் வசதியும் இருந்தது. நாங்கள் அதில் வைத்து விட்டு உள்ளே சென்றால் நிறையப் பேர் வரிசையில் நின்று கொண்டே போன் பேசுகின்றனர். குருக்கள் முதற் கொண்டு போன் பேசிக் கொண்டு தான் இருந்தார். நாங்கள் போன் இல்லாமல் நிம்மதியாக சுவாமி தரிசனம் முடித்து விட்டு வந்தால் மனது கஷ்டமாக இருந்தது.
அப்புறம் ஏன் கோவிலில் rules போட வேண்டும். ஆபிஸில் இருந்த ஒரு பெரியவரிடம் இதை நாங்கள் கூறும் complaint ஆக எடுத்துக் கொள்ளுங்கள் எனக் கூறி விட்டு வந்தோம். அகிலாண்டேஸ்வரி, ஜம்புகேஸ்வரா அனைவரையும் காப்பாற்றுங்கள்.