வீட்டு உபயோகத்திற்கான சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.60 உயர்வு
புதுடெல்லி: இந்தியக் குடும்பங்களின் மாதாந்திர பட்ஜெட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், வீட்டு உபயோக சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இன்று (மார்ச் 7, 2026) முதல் அமலுக்கு வந்துள்ள இந்த விலை உயர்வு, பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவி வரும் கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. தற்போது ஈரான்-அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக கப்பல் வழி போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கத்தார் உள்ளிட்ட நாடுகளில் இருந்து மற்ற நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்ய முடியாமல் தேங்கி உள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
சிலிண்டர் விலை உயர்வு :
வீட்டு உபயோக சிலிண்டர் (14.2 கிலோ): இதன் விலை சிலிண்டருக்கு ரூ. 60 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த 11 மாதங்களுக்குப் பிறகு வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
வணிக பயன்பாட்டு சிலிண்டர் (19 கிலோ): ஹோட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்குப் பயன்படுத்தப்படும் இந்த சிலிண்டரின் விலை ரூ. 115 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
முக்கிய நகரங்களில் புதிய விலை நிலவரம் (வீட்டு உபயோக சிலிண்டர்):
இந்த விலை உயர்விற்குப் பிறகு, இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒரு சிலிண்டரின் விலை பின்வருமாறு இருக்கும்:
சென்னை: ரூ. 928.50
டெல்லி: ரூ. 913
மும்பை: ரூ. 912.50
கொல்கத்தா: ரூ. 930
மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர் பெறும் பயனாளிகளுக்கு வழங்கப்படும் ரூ. 300 மானியம் தொடர்ந்து நீடிக்கும் என்பதால், அவர்களுக்கு இந்த விலை உயர்விலிருந்து சற்று விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் தவித்து வரும் நடுத்தர வர்க்கத்தினர், இந்தத் திடீர் சிலிண்டர் விலை உயர்வால் கடும் அதிருப்தியில் உள்ளனர். வணிக சிலிண்டர் விலை உயர்வால் ஹோட்டல்களில் உணவுப் பொருட்களின் விலையும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.