ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து.. புளூ பேர்ட் செயற்கைக்கோளுடன்.. விண்ணில் பாய்ந்த எல்.வி.எம்.3-எம்.6
ஸ்ரீஹரிகோட்டா: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), வணிக ரீதியிலான மற்றும் அறிவியல் ரீதியிலான அடுத்தடுத்த வெற்றிகளைப் பதிவு செய்து வரும் நிலையில், இன்று மற்றுமொரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து 'எல்.வி.எம்.3-எம்.6' (LVM3-M6) ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இந்த ராக்கெட் ‘புளூ பேர்ட்’ (Blue Bird) என்ற செயற்கைக்கோளை சுமந்து சென்றது. திட்டமிட்டபடி ராக்கெட்டின் அனைத்து நிலைகளும் துல்லியமாகச் செயல்பட்டு, செயற்கைக்கோளை அதன் இலக்கு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியது.
இஸ்ரோவின் மிகவும் சக்திவாய்ந்த ராக்கெட்டான LVM3 (Launch Vehicle Mark 3), கனரக செயற்கைக்கோள்களை ஏவுவதில் தனது நம்பகத்தன்மையை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
இந்த வெற்றியின் மூலம் விண்வெளித் துறையில் இந்தியாவின் உலகளாவிய சந்தை மதிப்பு மேலும் உயர்ந்துள்ளதாக விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதைக் கண்டு இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்துக் கொண்டனர்.