உறவைத் தேடி..!
- மை. மதலைமேரி
அமலி தன் குடும்பத்துடன் டிசம்பர் விடுமுறைக்கு வேளாங்கண்ணி அன்னையை தரிசிக்க சென்றாள். தன் மகனுக்கு மொட்டை அடித்து விட்டு கடலில் குளிக்கலாம் என்று சென்றார்கள். ஒரே மழையாக இருந்தது. அவசரமாக குளித்துவிட்டு கோவிலுக்கு அருகில் உள்ள உடைமாற்றும் அறைக்குச் சென்றாள். அங்கு நீளமான தடுப்பு இருந்தது அதில் ஒரு மேடையும் அமைத்திருந்தார்கள். அந்த மேடையின் மூலையில் உடல் மெலிந்து ,மெல்லிய தோற்றத்தோடு உடலைக் குறுக்கி படுத்திருந்த 80 வயது மதிக்கத்தக்க ஒரு பாட்டியின் முகத்தில் ஒரே கவலை உடல் மெலிந்து ,கண்களில் பார்வை இழந்து குளிரில் நடுங்கிக் கொண்டு மூலையில் படுத்து இருந்தாள் ஒரு பாட்டி.
இந்த குளிரில் இங்கே ஏன் இருக்கீங்க? என்றாள்அமலி. இங்க தாம்மா பல வருஷமா இருக்கிறேன் என்றாள் அந்த மூதாட்டி. ஏன் உங்க உறவினர் யாரும் இல்லையா? என்று கேட்டுக்கொண்டே உடை மாற்ற ஆரம்பித்தாள் அமலி. ஆடைகள் ஈரமாக இருந்ததால் உடை மாற்றுவதில் சற்று சிரமப்பட்டாள். இருந்தாலும் பாட்டியைப்பற்றி தெரிந்து கொள்வதில் ஆர்வம் அதிகமானதால் பாட்டியிடம் பேச்சு கொடுத்தாள் அமலி. மூதாட்டியும் பேசினால் சற்று ஆறுதலாக இருக்கும் என்று நினைத்து தெரிந்தவள் போல பேச ஆரம்பித்தாள்.
எனக்கு ஒரு மகன், ஒரு மகள், சொந்தக்காரங்க எல்லாம் புதுக்கோட்டை பக்கம் இருக்காங்கம்மா. அப்புறம் இங்கே,ஏன் இப்படி இருக்கீங்க? என்று கேட்டாள் அமலி. பாட்டியின் முகத்தில் கவலை படர்ந்தது, கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது. ஐயோ ! நான் ஏதாவது தப்பா கேட்டேனா? என்றாள் அமலி. அப்படியெல்லாம் இல்லம்மா, நன்றாக வாழ்ந்த குடும்பம்மா, என் மகளை ஒரு குடிகாரனுக்கு தெரியாம கட்டிக் கொடுத்துட்டேன். அவ ரொம்ப கஷ்டப்படுகிறாள் என்று இழுத்தாள் பாட்டி .
அமலியும் பேச்சை நிறுத்தாமல் தொடர்ந்தாள் . அதான் உங்களுக்கு மகன் இருக்காருன்னு சொன்னீங்க?
என்று கேட்டாள் அமலி, பாட்டி அழுதே விட்டாள். தன் கதையை கூற ஆரம்பித்தாள். என் மகன் சொத்தை எல்லாம் விற்று விட்டான். அதனால மருமக என்னை வீட்டில் சேர்ப்பது இல்லை. என்னால் வீட்டில் தினமும் சண்டை. நான் யாருக்கும் பாரமாக இருக்கக் கூடாது என்று நினைத்து கிளம்பி வந்துட்டேன் என்றாள் பாட்டி. அமலி அதிர்ந்து விட்டாள். உங்களை தேடி யாருமே வரலையா? கண்களில் கண்ணீர் வடிய சொந்தக்காரங்களும் வரல, மகனும் வரல, மகள் மட்டும் யாரோ சொல்லி வந்து பார்த்துட்டு போச்சு. அது கூட கூப்டுச்சு, ஆனா எனக்கு தான் போக மனசு வரல, அவ ரொம்ப கஷ்டப்படுறாம்மா என்றாள் பாட்டி.
அமலிக்கு தொண்டை அடைத்தது. கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு திடமான மனதுடன் பேச ஆரம்பித்தாள் மூதாட்டி. அதனால என்னம்மா? இங்கு எங்கள மாதிரி வீட்டை விட்டு வந்து இங்க இருக்கிறவங்க எல்லாருக்கும் சாமியார் தான் மகன் மாதிரி நல்லடக்கம் பண்ணிடுவாங்க என்றாள் மன தைரியமாக. அதோட நிக்காம கடவுள் தான்மா எங்க எல்லாருக்கும் மகன். மாதாவுக்கே இதோ உன் மகன் என்று தானே சொன்னார். அது மாதிரி எங்க எல்லாருக்கும் கடவுள் தான் மகன். பாட்டி தன்னம்பிக்கையுடன் கூறும் பொழுது பாட்டியின் கண்களில் ஒரு வித ஒளி இருந்தது .
வெளியில் இருந்து அமலியின் மகன் அம்மா ,அம்மா என்று கூப்பிடும் சத்தம் கேட்டு அமலி வெளியே ஓடினாள் . கணவர் ஏன் இவ்வளவு நேரம் என்று கேட்டது அவள் காதில் விழவில்லை. ஏங்க பணம் இருந்தா குடுங்க என்று 100 ரூபாய் நோட்டை வாங்கிக் கொண்டு பாட்டி இருந்த இடத்திற்கு சென்றாள். அதற்குள் அங்கிருந்த தண்ணீரை கூட்டி விட்டுக் கொண்டிருந்தாள் பாட்டி. வேகமாக ஓடி இந்தாங்க பாட்டி என்று கையில் 100 ரூபாய் நோட்டை திணித்தாள் அமலி.
அது எல்லாம் வேணாமா நான் யாரிடமும் யாசகம் பெறுவதில்லை. என்றாள் மூதாட்டி அதைக் கேட்டவுடன் ஆச்சரியமாக பார்த்தாள் அமலி. தொடர்ந்து கூறினார் பாட்டி ,ஆமாம்மா நான் ஜெபமாலை விற்கிறேன் என்றார் பாட்டி. அப்படி என்றால் ஜெபமாலை கொடுங்க என்று வாங்கிக் கொண்டு பாட்டியின் சுயமரியாதையை எண்ணி வியந்து கொண்டு வெளியே வந்தாள் அமலி. பாட்டியின் சொற்கள் அமலியை சற்று அசைத்துப் பார்த்திருந்தது.
வெளியே அமலியின் மாமியார் இவ்வளவு நேரமா உனக்காக காத்துகிட்டு இருக்கேன் என்று கோபப்பட்டார் .வேறு நேரமாக இருந்திருந்தால் அமலி கண்டிப்பாக கோபப்படுவாள். ஆனால் இப்போது ஒன்றும் பேசாமல் மாமியார் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டு மெதுவாக அழைத்துச் சென்றாள். அதை மாமியார் சற்று ஆச்சரியத்துடன் பார்த்தார். அவளுக்குள் மாற்றம் இருப்பதை உணர்ந்தார்.
மாமியார் என்பவரும் ஒரு தாய் தான் எந்த நேரத்திலும் அவர்களை வருத்தப்பட வைக்க கூடாது என்று மனதில் நினைத்தாள். இப்பொழுதெல்லாம் மாமியார் என்ன சொன்னாலும் செய்து விடுகிறாள்.
மாமியாரை ஒருபோதும் தவிக்க விட வேண்டாம். நாமும் ஒரு நாள் மாமியார் ஆவோம். நாம் எப்படி நடந்து கொள்கிறோமோ, அப்படியே நமக்கும் நடக்கும் என்று அனைவரும் நினைக்க வேண்டும்!
(மை. மதலை மேரி ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி, நரசிம்மநாயக்கன்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், கோவை- 31)