காத்திருப்பு!
- மடிப்பாக்கம் பிரபாவதி
கல்யாணி காத்திருந்தாள். நல்ல சேதிக்காக எதிர்பார்த்திருந்தாள்.
அந்த ஊரிலேயே பட்டப்படிப்பு படித்து முடித்து மேற்படிப்பு படிக்க விண்ணப்பித்து காத்திருந்தாள்.
பணம் கட்ட யாருமில்லை. குடும்பமும் பெரிசு. எப்படியாவது படித்து குடும்பத்தை முன்னேற்ற நினைத்தாள்.
படிக்க இடம் கிடைத்தது. மகிழ்ந்து போனாள். ஊர்கூடி தேர் இழுப்பது போல ஊரார் உதவியுடன் படிக்கச் சென்றுவிட்டாள். நன்கு படித்து தேர்வுகளையும் எழுதிவிட்டாள். இதோ மறுபடியும் தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்கிறாள். பிறகு நல்ல வேலைக்காக காத்திருந்தாள். நன்றாகவே நடந்தது. மேலும் அரசாங்கப் பதவிக்காக தேர்வு எழுதி காத்திருந்து உத்தியோகமும் கிடைத்தது. வாழ்க்கைப் பயணம் சீராக உயர்ந்து கொண்டே போனதில் மிகவும் சந்தோஷமாக இருந்தாள் கல்யாணி.
பெற்றோருக்கு பெருமை சேர்த்தாள். குடும்பத்தை நன்கு பொறுப்பாகப் பார்த்துக் கொண்டாள்.
ஊரே மெச்சியது. உடன் பிறப்புக்களையும் உயர்த்திப் பார்த்தாள்.
வயது ஏறிப்போனது. அத்தை மகன் சொல்லப்போகும் ஒத்தை சொல்லுக்காக காத்திருந்தாள்.
கனிந்த காதல் கல்யாணத்தில் பூத்துக் குலுங்கக் காத்திருந்தாள்.
"அவங்க வீட்டில் படிச்ச பொண்ணு வேணாம்னு சொல்றாங்களாம். குடும்பத்துக்கு ஆகாதாம்" அம்மா சொன்னாள். எப்படி மாறிப்போனார்கள்?
பெரிய புள்ள ஆனதுமே பரிசம் போட்டுட்டு போனாங்க. மனசு முழுவதும் அத்தை மகன் ரத்தினம் அலைகழித்துக் கொண்டிருக்க காத்திருக்கிறாள். மஞ்சள் கயிறு கட்டி மருமகளாய் அழைத்துப்போக ரத்தினத்தை எதிர்பார்த்து காத்திருந்தாள்.
மனசென்ன மாராப்புச் சேலையா? மாற்றிக்கொள்ள. வருவான் வாழ்வு தருவானென காத்திருக்கிறாள்.
ரத்தினம் வரவேண்டும். வந்து கரம்பற்றி வாழ்வு தரவேண்டும் என்று நாமும் காத்திருப்போம்.
(எழுத்தாளர் பிரபாவதி, சென்னை மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர். பேக்கிடெர்ம் டேல்ஸ் (publishers) மூலம் ஏனையோருடன் சேர்ந்து 42 புத்தகங்களில் எழுதியிருக்கிறார். ராணி, விகடகவி, மலர்வனம், லேடீஸ் ஸ்பெஷல், விருட்சம், இறகுகள், தமிழ்நாடு இ பேப்பர், மின் கைத்தடி உள்ளிட்டவற்றில் இருபத்தி ஐந்துக்கும் மேல் சிறுகதைகள் எழுதியுள்ளார். தனது மகளுடன் இணைந்து ஒரே கதையை ஆளுக்கொரு அத்தியாயமாக எழுதி 2 புத்தகங்கள் வெளியிட்டுள்ளார். சின்னஞ்சிறு கதைகள் என்ற சிறுகதை தொகுப்பும், Booner to GenZ அலப்பறைகள் என்ற 35 பகுதிகள் அடங்கிய நாவலும் எழுதியுள்ளார்.)