அவளும் நானே அவனும் நானே

Su.tha Arivalagan
Nov 24, 2026,02:21 PM IST

- மடிப்பாக்கம் பிரபாவதி


மகேஷிற்கு பத்தாம் வகுப்பு வந்தது முதலே என்னவோ போல் இருந்தது.  ஏதோ தன் எண்ணங்கள் தன்னையும் மீறி தன்னிச்சையாக செயல்படுவதாய் உணர்ந்தான்.  வகுப்பில் நல்லப் பிள்ளையாக சமர்த்தாக இருப்பவன் தற்போதெல்லாம் சக தோழர்களிடம் பேசுவதையோ, அருகில் சென்று பழகுவதையோ தவிர்த்து வருகிறான்.  மாற்றங்கள் நிகழ்வதை உணர நாட்கள் சில பிடித்தது.


அந்தப் பன்னாட்டு நிறுவனத்தின் முக்கிய ஆலோசகராக இருக்கும் அந்தப் பெண்ணுக்கு ஒரு முப்பது வயதிருக்கலாம்.


திறமை என்றால் அப்படி ஒரு திறமை.   ஒவ்வொரு விஷயத்திலும் தீர்க்கமான முடிவு செய்து செயல்படுத்தி வெற்றி பெறுவது அவளுக்கு மிகவும் சுலபம்.


அரவிந்தனுக்கு அந்தப் பெண்ணின் திறமையை விட தோற்றத்தில் மிகவும் சந்தேகமும் ஆச்சர்யமும் இருந்தது.  திருநங்கையாக இருக்குமோ என்று தோன்றியது எனலாம்.  




யாரிடம் கேட்பது?  மாநிலம் விட்டு மாநிலம் வந்திருக்கிறான்.  அந்த சந்திப்பு மூலமாக சென்னையில் இருக்கும் தமது நிறுவனத்திற்கு சில ஆலோசனைகள் பெற வந்துள்ளான்.


பேச்சுத் துவங்கியது.  ஆணுமில்லை, பெண்ணுமில்லை என்பதுபோல் ஒரு குரல்.  தடையில்லாத பேச்சு.  கடைசியில் கைகுலுக்கித் திரும்புகையில் சக பணியாளர் ஒருவரிடம் மெல்லக் கேட்டுப் பார்த்தான்.


"அவுங்க பேரு மகேஷ்வரியா?  அவங்களுக்கு மேரேஜ் ஆயிடுச்சா?" தைரியமாகக் கேட்டுவிட்டான்.


"ஐயா, அவங்க கல்யாணமெல்லாம் செஞ்சுக்க முடியாது.   அவங்க அவங்க......" அந்த தடை செய்யப்பட்ட வார்த்தையைச் சொன்னான்.


"அதான் நெனச்சேன்" என்றான் அரவிந்தன்.


"யார்கிட்டயும் சொல்லிடாதீங்க.  மேடம் ரொம்ப தங்கமானவங்க.  தெரிஞ்சதுன்னா ரொம்ப வருத்தப்படுவாங்க" என்றான்.


"மே ஐ கமின் மகேஷ்?" 


"யா ப்ளீஸ்"


"மகேஷ் நீ எப்பிடி இப்பிடி?  என்னைத்தெரியல?  நான்தான் உங்கூடப் படிச்ச அரவிந்தன்?"


கைகொடுக்க வந்தவள் இடது கையால் வலது கையை இழுத்துக் கொண்டாள்.  "என்னடா நீ, இவ்ளோ தூரம் நடந்துருக்கு.  எங்களுக்கெல்லாம் எதுவும் தெரியாதுடா" வருந்தினான் அரவிந்த்.


"இல்லடா பத்தாவது படிக்கும்போதே தெரிஞ்சிடுச்சு.  அப்பாகிட்ட மட்டும் சொன்னேன்.  அம்மாகிட்ட சொல்ல கூச்சமா இருந்துது.  அப்பாதான் தன்னோட நண்பர் மூலமா இங்க பாம்பே வந்து தங்கிப் படிச்சு இந்த நிலைமைக்கு வந்திருக்கிறேன்"


"எங்கம்மா, என் தங்கச்சியை பார்க்கக் கூட முடியாம ரொம்ப வருஷம் சிரமப்பட்டேன்டா"  கண்ணீர் கன்னம் நனைத்தது மகேஸ்வரிக்கு.


இப்ப அம்மா அப்பா என்னோடத்தான் இருக்காங்க.  என் தங்கச்சிக்கு நல்ல இடத்துல சம்பந்தம் பேசி முடிச்சு, அவளும் நல்லாருக்கா. ஒன்னப் பாக்கும் போதே சந்தேகமா இருந்தது.   எப்படிடா கேப்பேன்?"

 

"ஊர்ல எல்லாரும் நல்லாருக்காங்கடா.  நம்ப செட்ல எல்லாருமே நல்ல நெலைமையில இருக்கோம்.  அடுத்த வாரமே குரூப் ஆரம்பிச்சு எல்லோருக்கும் தோது படறமாதிரி ஒரு நாள் சந்திப்போம் மகேஷ்.  ஒன்னும் கவலைப்படாதடா.  நீ சாதிச்சிருக்க.  ஒன்னப் பாராட்டணும் டீ" என்று அரவிந்த் முடித்தபோது,

கண்ணீரைப் பதிலாகத் தந்தாள் மகேஸ்வரி.   தற்போது பன்னாட்டு நிறுவனத்தில் அரவிந்தனுக்கு ஆலோசகியாக இருக்கும் அவளும் நானே, கிராமத்தில் அரவிந்தனுடன் படித்த அவனும் நானே  என்று சொல்லி முடித்து கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள் மகேஸ்வரி.


(எழுத்தாளர் பிரபாவதி, சென்னை மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர். பேக்கிடெர்ம் டேல்ஸ் (publishers) மூலம் ஏனையோருடன் சேர்ந்து 42 புத்தகங்களில் எழுதியிருக்கிறார். ராணி, விகடகவி, மலர்வனம், லேடீஸ் ஸ்பெஷல், விருட்சம், இறகுகள், தமிழ்நாடு இ பேப்பர், மின் கைத்தடி உள்ளிட்டவற்றில் இருபத்தி ஐந்துக்கும் மேல் சிறுகதைகள் எழுதியுள்ளார். தனது மகளுடன் இணைந்து ஒரே கதையை ஆளுக்கொரு அத்தியாயமாக எழுதி 2 புத்தகங்கள் வெளியிட்டுள்ளார். சின்னஞ்சிறு கதைகள் என்ற சிறுகதை தொகுப்பும், Booner to GenZ அலப்பறைகள் என்ற 35 பகுதிகள் அடங்கிய நாவலும் எழுதியுள்ளார்.)