ஜனநாயகன் பட வழக்கை மீண்டும் தனி நீதிபதி விசாரிக்க சென்னை ஹைகோர்ட் உத்தரவு

Su.tha Arivalagan
Jan 27, 2026,11:32 AM IST

சென்னை:  ஜனநாயகன் திரைப்பட வழக்கை மீண்டும் தனி நீதிபதி பி.டி.ஆஷா விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற இரு நபர் அமர்வு உத்தரவிட்டுள்ளது. மேலும் தனி நீதிபதி ஏற்கனவே இதுதொடர்பாக பிறப்பித்த சான்றிதழ் வழங்கும் உத்தரவையும் உயர்நீதிமன்ற அமர்வு ரத்து செய்துள்ளது.


ஜனநாயகன் திரைப்படம் இப்போதைக்கு வெளி வரும் வாய்ப்பில்லை என்பது இன்றைய தீர்ப்பின் மூலம் தெரிய வந்துள்ளது.


ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் (CBFC) வழங்கக் கோரி தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மேலும், இந்த வழக்கை மீண்டும் தனிநீதிபதியின் விசாரணைக்கே திருப்பி அனுப்பியுள்ளது.




சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீவாத்சவா மற்றும் நீதிபதி அருள்முருகன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று இதுதொடர்பாக பிறப்பித்த உத்தரவின் முக்கிய அம்சங்கள்:


புகாரில் எழுப்பப்பட்டுள்ள அம்சங்களைக் கருத்தில் கொள்ளும்போது, இந்தியத் தணிக்கை வாரியத்திற்கு (CBFC) தகுந்த விளக்கம் அளிக்க வாய்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என நீதிமன்றம் கருதுகிறது.


இயற்கை நீதியைக் கருத்தில் கொண்டு, தனிநீதிபதியின் முந்தைய உத்தரவை ரத்து செய்து, இந்த விவகாரத்தை மீண்டும் அவரிடமே திரும்ப ஒப்படைக்கிறது.


தணிக்கை வாரியத்திற்கு முறையான வாய்ப்பு வழங்காமலும், வாரியத் தலைவரின் உத்தரவை எதிர்த்து முறையீடு செய்யாத நிலையிலும், தனிநீதிபதி வழக்கின் மெரிட் (Merits) குறித்து ஆராய்ந்திருக்கக் கூடாது.


தணிக்கை வாரியத்திற்கு முறையான வாய்ப்பளித்து, இந்த வழக்கை விரைவாக விசாரித்து முடிவெடுக்குமாறு தனிநீதிபதிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிடுகிறது.


தயாரிப்பு நிறுவனம் தனது மனுவில் உரிய திருத்தங்களை மேற்கொண்டு, தணிக்கை வாரியத் தலைவரின் (Chairperson) உத்தரவையும் எதிர்த்து முறையிட வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.


திரைப்படத்தில் வெளிநாட்டு சக்திகள் இந்தியாவில் பிரச்சினை செய்வது போல காட்சிகள் உள்ளன. இதுதொடர்பான வசனங்களும் இடம் பெற்றுள்ளன. இது இந்தியாவில் மதப் பிரச்சினையை உருவாக்கும் வாய்ப்புள்ளதாக கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.


தணிக்கை வாரியத்திற்கு உரிய கால அவகாசம் அளித்து, இரு தரப்பு விளக்கங்களையும் உரிய முறையில் தாக்கல் செய்ய அவகாசம் அளித்து இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும். தயாரிப்பு நிறுவனம் புதிய மனுவைத் தாக்கல் செய்த பின்னர் இந்த வழக்கை முன்னுரிமை கொடுத்து விரைவாக விசாரிக்க தனி நீதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இந்தத் தீர்ப்பு காரணமாக ஜனநாயகன் பட வழக்கு மீண்டும் ஒரு விசாரணைக்குச் செல்லவுள்ளது. இந்த வழக்கு விசாரணை எப்போது தொடங்கி எப்போது முடியும் என்று தெரியவில்லை. இதன் காரணமாக இப்போதைக்கு ஜனநாயகன் படம் வெளியாக வாய்ப்பில்லை. பிப்ரவரி முதல் வாரத்தில் படத்தைத் திரையிட படத் தயாரிப்பு நிறுவனம் ஆயத்தமாகி வருவதாக ஒரு தகவல் வெளியாகியிருந்தது. தற்போது அந்த வாய்ப்பு சுத்தமாக அடிபட்டுள்ளது. 


இந்த வழக்கு விசாரணையின் இறுதியில் தணிக்கை சான்றிதழ் வழங்க தனி நீதிபதி உத்தரவிட்டால், அதை எதிர்த்து நிச்சயம் தணிக்கை வாரியம் அப்பீல் செய்யும். அந்த வழக்கு சற்று காலம் நீடிக்கும். ஒரு வேளை, மறு தணிக்கைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டாலும் கூட அதை முடிக்க குறைந்தபட்சம் 2 வாரங்களாவது தணிக்கை வாரியம் எடுக்கக் கூடிய வாய்ப்புகள் உள்ளன என்பதால் இந்த படத்திற்கான சான்றிதழ் கிடைக்க குறைந்தது ஒரு மாத காலம் ஆகும் என்று கணிக்கப்படுகிறது. அப்படி நடந்தால் ஜனநாயகன் படம் சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு வெளியாகும் வாய்ப்பும் குறைவாகி விடும். காரணம் சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டால், ஜனநாயகன் படத்தை திரையிட முடியாது. காரணம், விஜய் தற்போது அரசியல் கட்சித் தலைவராகவும் இருக்கிறார் என்பதால் அந்த சிக்கலும் உள்ளது.


ஜனநாயகன் பட விவகாரம் இந்த அளவுக்கு பூதாகரமாக மாறியிருப்பது திரைத் துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பையும், விவாதங்களையும் கிளப்பியுள்ளது.