அதிமுக பொதுச் செயலாளராக.. எடப்பாடி பழனிச்சாமி தேர்வுக்கு.. எதிரான மனு தள்ளுபடி
சென்னை : அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
அதிமுக.,வின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து சூரியமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் சூரியமூர்த்தி வழக்கை நிராகரிக்க முடியாது என உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
இபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட், அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்த வழக்கை நிராகரித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அதோடு அந்த மனுவை தள்ளுபடி செய்வதாகவும் ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
தற்போது அதிமுக.,வில் இருக்கும் அரசியல் குழப்பமான சூழலில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக சென்னை ஐகோர்ட் பிறப்பித்துள்ள உத்தரவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதனால் எடப்பாடி பழனிச்சாமியின் பலம் கட்சியில் அதிகரித்திருப்பதாக பார்க்கப்படுகிறது.