ராமதாஸ், அன்புமணி நேரில் வாங்க.. தனியாக பேச வேண்டும்.. நீதிபதி உத்தரவு.. அடுத்தது என்ன?
சென்னை : டாக்டர் அன்புமணி நடத்தும் பொதுக்குழுவிற்கு தடை விதிக்கக்கோரி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தரப்பில் தாக்கல் செய்த வழக்கில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் நேரில் வர நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இருவரிடமும் தனியாக பேசப் போவதாகவும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
பாமக பொதுக்குழு கூட்டம் ஆகஸ்ட் 17ம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சமீபத்தில் அறிவித்தார். அவர் அறிவிப்பு வெளியிட்ட உடனேயே, தனது தலைமையில் பாமக பொதுக் குழு ஆகஸ்ட் 9ம் தேதி நடைபெறும் என அன்புமணியும் அறிவிப்பு வெளியிட்டார். அன்புமணி அறிவித்த பொதுக்குழு நாளை நடைபெற உள்ள நிலையில், அந்த பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நேற்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
கட்சியின் நிறுவனருக்கே செயற்குழு, பொதுக் குழுவை கூட்டும் அதிகாரம் உள்ளது. கட்சிக்குள் குழப்பம் விளைவிக்கும் முயற்சியில் அன்புமணி தன்னை தானே தலைவர் என சொல்லிக் கொண்டு பொதுக் குழுவிற்கு அழைப்பு விடுத்துள்ளார் என்று டாக்டர் ராமதாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
டாக்டர் ராமதாஸ் தரப்பு மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இன்று மாலை 5.30 மணிக்கு ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் தனது அறைக்கு நேரில் வரும் படி உத்தரவு பிறப்பித்தார். இதுகுறித்து நீதிபதி கூறுகையில், டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மட்டும் எனது அறையில் இருக்க வேண்டும். கட்சிக்காரர்கள், வழக்கறிஞர்கள் என வேறு யாரும் இருக்கக் கூடாது. பாமகவின் நலனைக் கருதி அவர்களுடன் தனியாக பேச விரும்புகிறேன் என்று கூறினார்.
இதனால் நாளை அன்புமணி தலைமையில் நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்குழு நடைபெறுமா, நடக்காதா என்பதும், அப்பா-மகன் இருவரின் யார் அறிவித்துள்ள பொதுக்குழு நடக்கும் என்பதும் இன்று மாலை நடக்க உள்ள நீதிபதி உடனான சந்திப்பிற்கு பிறகே தெரியும் என சொல்லப்படுகிறது.
டாக்டர் ராமதாஸையும், அன்புமணி ராமதாஸையும் பாமகவின் நலன் கருதி தனியாக சந்திக்க நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அழைப்பு விடுத்திருப்பது பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.