விஷால் தொடர்ந்த அப்பீல் மனு.. விசாரிக்க நீதிபதி ஜெயச்சந்திரன் மறுப்பு.. வேறு பெஞ்சுக்கு பரிந்துரை
Nov 15, 2025,12:21 PM IST
சென்னை: நடிகர் விஷால், லைகா புரொடக்ஷன்ஸுக்கு 21 கோடி ரூபாய் 30% வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்த வழக்கை, நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரிக்க மறுத்துவிட்டார். இந்த வழக்கை வேறு நீதிபதி அமர்வுக்கு மாற்றுமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.
விஷால் தனது விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்திற்காக, சினிமா ஃபைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் ஃபிலிம்ஸிடமிருந்து 21.29 கோடி ரூபாய் கடன் வாங்கியிருந்தார். இந்தக் கடனை லைகா புரொடக்ஷன்ஸ் அடைத்தது. ஒப்பந்தப்படி, கடன் முழுமையாகத் திருப்பிச் செலுத்தப்படும் வரை, விஷால் நிறுவனத்தின் படங்கள் அனைத்தின் உரிமைகளும் லைகா புரொடக்ஷன்ஸுக்குச் சொந்தமாக இருக்கும். ஆனால், இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் படங்கள் வெளியிடப்பட்டதாக லைகா புரொடக்ஷன்ஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், விஷால் லைகாவுக்கு 21.29 கோடி ரூபாயுடன் 30% வட்டியையும் சேர்த்துச் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து விஷால் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன் மற்றும் மும்மிணினி சுதீர் குமார் அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது.