புலி வருமானத்தை மறைத்த வழக்கு.. விஜய்க்கு விதித்த ரூ. 1.50 கோடி அபராதம் செல்லும்!
சென்னை : தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய் சம்பந்தப்பட்ட முக்கியமான வருமான வரி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) தீர்ப்பளித்துள்ளது. அடுத்தடுத்து அவருக்கு ப் பின்னடைவு ஏற்பட்டு வருவது அவரது கட்சியினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
புலி படத்தின் மூலம் கிடைத்த ரூ.15 கோடி கூடுதல் வருமானத்தை முறையாகத் தெரிவிக்கவில்லை என்று கூறி, வருமான வரித்துறை விஜய்க்கு ரூ.1.5 கோடி அபராதம் விதித்தது. இதுதான் இந்த வழக்கின் மையப்புள்ளி. 2015-ம் ஆண்டு விஜய்யின் இல்லம் மற்றும் அலுவலகங்களில் நடத்தப்பட்ட வருமான வரிச் சோதனையைத் தொடர்ந்து இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.
வருமான வரித்துறையின் கூற்றுப்படி, 2015-ம் ஆண்டு வெளியான 'புலி' திரைப்படத்திற்காக விஜய் பெற்ற சம்பளத்தில் சுமார் ரூ.15 கோடி ரொக்கமாக வழங்கப்பட்டதாகவும், அந்தத் தொகை கணக்கில் காட்டப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. சோதனையின் போது தான் இது தெரிய வந்ததால், வருமான வரிச் சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்பட்டதாகத் வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அபராதத்தை எதிர்த்து விஜய் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அபராதம் விதிக்கத் துறைக்கு அதிகாரம் இருக்கலாம், ஆனால் அது விதிக்கப்பட்ட கால அளவு சட்ட ரீதியாகத் தவறானது என்று அவர் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த அபராதம் ஜூன் 30, 2019-க்குள் விதிக்கப்பட்டிருக்க வேண்டும், ஆனால் ஜூன் 30, 2022 அன்றுதான் விதிக்கப்பட்டது. காலதாமதமாக விதிக்கப்பட்ட இந்த அபராதம் சட்டப்படி செல்லாது என்பது விஜய்யின் தரப்பு வாதம். இருப்பினும், வருமான வரித்துறை இதை மறுத்துள்ளது. நடைமுறைத் தவறுகள் ஏதும் நடக்கவில்லை என்றும், சட்ட விதிகளின்படியே அபராதம் விதிக்கப்பட்டதாகவும் துறை தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது வருமானவரித்துறை நடவடிக்கையில் எந்த விதி மீறலும் இல்லை, நடிகர் விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதம் செல்லும் என்றும் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. மேலும் விஜய்யின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொழில்நுட்ப ரீதியானது என்றாலும், இதன் தாக்கம் விஜய்யின் பொது வாழ்க்கையில் முக்கியமானது. தனது அரசியல் கட்சியைத் தொடங்கி, ஊழலை ஒழிப்பேன் என்றும், தூய்மையான ஆட்சியைத் தருவேன் என்றும் விஜய் கூறி வருகிறார். உச்சக்கட்ட புகழில் இருக்கும் போதே தனது திரைவாழ்க்கையைத் துறந்து அரசியலுக்கு வருவதைத் தியாகமாக அவர் முன்னிறுயுள்ளார். இந்தச் சூழலில், நீதிமன்றத் தீர்ப்பு அவருக்கு எதிராக அமைந்திருப்பது, அவரது ஊழல் எதிர்ப்பு நிலைப்பாட்டை மற்ற கட்சியினர் கேள்வி எழுப்ப வாய்ப்புள்ளது.
விஜய் அரசியலுக்கு வந்தது முதலே அவருக்கு எதிராகவே எல்லாம் போய்க் கொண்டுள்ளது. கரூர் சம்பவம், ஜனநாயகன் படம் வெளிவருவதில் சிக்கல், சிபிஐ விசாரணை, இப்போது வருமானவரித்துறை அபராதம் என அடுத்தடுத்து விஜய்க்குப் பின்னடைவு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.