தேர்தல் வழக்கு எதிரொலி.. திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத் தேர்தல் நடத்தத் தடை

Su.tha Arivalagan
Jul 10, 2026,05:46 PM IST

சென்னை: திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளில் தேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு நிலுவையில் உள்ளதால் அந்தத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.


திருச்சி கிழக்கு, விராலிமலை, அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர் சட்டசபைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஜூலை 31ம் தேதி வரை தேர்தல் தேதியை அறிவிக்க இந்த இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக தேர்தல் ஆணையம், சட்டசபைச் செயலாளர் உள்ளிட்டோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


குறிப்பிட்ட தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட தேர்தல் ஆணையத்திற்குத் தடை விதிக்கக் கோரி நெல்லையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு, இந்த இடைக்காலத் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. 




திருச்சி கிழக்கில் முதல்வர் விஜய் போட்டியிட்டு வென்றிருந்தார். பெரம்பூர் தொகுதியை தக்க வைத்துக் கொண்டு திருச்சி கிழக்கை அவர் ராஜினாமா செய்தார். அவர் வேட்பு மனுவில் தனது சொத்து மதிப்பு குறித்து சரிவரத் தெரிவிக்கவில்லை என்று கூறி வழக்கு நிலுவையில் உள்ள்ளது.


மற்ற நான்கு தொகுதிகளான விராலிமலை (சி. விஜயபாஸ்கர்), பெருந்துறை (ஜெயக்குமார்), அம்பாசமுத்திரம் (இசக்கி சுப்பையா), கரூர் (எம்.ஆர். விஜயபாஸ்கர்) ஆகியவற்றில் அதிமுக வெற்றி பெற்றது. 


இந்த நான்கு பேரும் தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்து விட்டனர். இந்த நான்கு பேரின் வெற்றியை எதிர்த்தும் வழக்குத் தொடரப்பட்டிருப்பதால் இவர்களது தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் தற்போது தள்ளிப் போகிறது.