2027 ஜனவரி முதல் மதுரை எய்ம்ஸ் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்கும்: மத்திய அரசு தகவல்
மதுரை : மதுரையில் கட்டப்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனையின் வெளிப்புற நோயாளிகள் பிரிவு (OPD) வரும் 2027-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் முழுமையாக நடைமுறைக்கு வரும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
வழக்கு பின்னணி மற்றும் தற்போதைய நிலை :
மதுரை தோப்பூரில் கட்டப்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனு உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மருத்துவமனை கட்டுமானப் பணிகளின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்தார்.
கட்டுமானப் பணிகளின் விவரங்கள்:
கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி நிலவரப்படி, எய்ம்ஸ் மருத்துவமனையின் ஒட்டுமொத்த கட்டுமானப் பணிகளில் 57 சதவீதம் நிறைவடைந்துள்ளன. செப்டம்பர் மாத இறுதிக்குள் கட்டுமானப் பணிகள் 59 சதவீதத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் பயன்பாட்டிற்காக ஜனவரி 1, 2027 முதல் வெளிப்புற நோயாளிகள் பிரிவு முழுமையாகச் செயல்படத் தொடங்கும்.
தென் தமிழக மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு :
தென் தமிழகத்தைச் சேர்ந்த மக்களுக்குச் உயர்தர சிகிச்சை அளிக்கும் நோக்கில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கத் திட்டமிடப்பட்டது. இந்த அதிநவீன மருத்துவமனையில் சர்வதேச அளவிலான சிகிச்சை வசதிகள், மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையங்கள் அமையவுள்ளன.தற்போது கட்டுமானப் பணிகள் வேகமெடுத்துள்ள நிலையில், 2027 ஜனவரி முதல் வெளிப்புற நோயாளிகள் பிரிவு பயன்பாட்டுக்கு வரவுள்ளது தென் தமிழக மக்களுக்குப் பெரும் ஆறுதலையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது. இதன் மூலம் மதுரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள திண்டுக்கல், தேனி, விருதுநகர், திருநெல்வேலி உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த நோயாளிகள் பயனடைவார்கள். முழு மருத்துவமனையையும் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் கட்டி முடித்து, விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு முழுமையாகக் கொண்டுவர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.