பாலகிருஷ்ணன் மரணம்: பிரேதப் பரிசோதனை அறிக்கையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்
மதுரை: மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்தில் உயிரிழந்த பாலகிருஷ்ணன் என்பவரின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் பல முக்கிய மற்றும் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது உடலின் பல்வேறு பகுதிகளில் ரத்தக்கசிவு காயங்களும், சிராய்ப்புகளும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
செக்கானூரணி காவல் நிலையத்தில் சமீபத்தில் புகார் அளிக்க வந்த டிரைவர் பாலகிருஷ்ணன் மர்மமான முறையில், கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரது உடலுக்கு மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கையின் விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:
கழுத்து மற்றும் வெளிப்புறக் காயங்கள்:
பாலகிருஷ்ணனின் கழுத்தின் முன்பகுதி மற்றும் இரு பக்கங்களிலும் 27 சென்டிமீட்டர் நீளமும், 2 சென்டிமீட்டர் அகலமும் கொண்ட சாய்வான கயிற்றுத் தடம் பதிவாகியுள்ளது. அதே சமயம், கழுத்தின் பின்புறத்தில் 16 சென்டிமீட்டர் அளவிற்கு இந்தத் தடம் இல்லாமல் இடைவெளி காணப்பட்டுள்ளது. கழுத்தின் வலது பக்கத்தில் கயிற்றுத் தடத்திற்குக் கீழே மூன்று சிறிய குத்து போன்ற சிராய்ப்புக் காயங்கள் நேர்க்கோட்டில் உள்ளன. மேலும், வலது தோள்பட்டையின் மேற்பகுதியில் 0.5 செ.மீ., இடது முழங்காலின் வெளிப்புறத்தில் 1 செ.மீ., மற்றும் இடது கையின் பின்புறத்தில் 0.4 செ.மீ. அளவிலும் சிராய்ப்புக் காயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. நாக்கின் நடுப்பகுதியில் சுமார் 4 சென்டிமீட்டர் நீளத்தில் வளைந்த வடிவிலான கடிபட்ட அடையாளங்களும் பதிவாகியுள்ளன.
முதுகுப் பகுதியில் ரத்தக்கசிவு:
பாலகிருஷ்ணனின் முதுகின் பல்வேறு பகுதிகளில் ஐந்து இடங்களில் நீல நிற ரத்தக்கசிவு காயங்கள் பதிவாகியுள்ளன. குறிப்பாக, வலது தோள்பட்டைக்குக் கீழே முதுகின் மேற்பகுதியில் 4×2.5 செ.மீ. அளவிலும், வலது பக்க கீழ் மார்புப் பகுதியின் பின்புறத்தில் 4×2 செ.மீ. அளவிலும் காயங்கள் உள்ளன. இது தவிர, கழுத்துக்குக் கீழே முதுகின் நடுப்பகுதியில் 3×3 செ.மீ. அளவிலும், அதற்குக் கீழே அடுத்தடுத்து 2×1 செ.மீ. மற்றும் 3×1 செ.மீ. அளவிலும் இரண்டு ரத்தக்கசிவு காயங்கள் காணப்பட்டுள்ளன.
உள் உறுப்புகளின் நிலை:
பிரேதப் பரிசோதனையின் போது, அவரது மூளை 1,400 கிராம் எடையுடன் வீக்கமடைந்த நிலையில் இருந்துள்ளது. இதயம் 358 கிராம் எடையுடன் சற்று பெரிதாக இருந்ததுடன், அதன் இடது வென்ட்ரிக்கிள் பகுதியில் 2 × 0.5 செ.மீ. அளவில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. இரண்டு நுரையீரல்களிலும் வீக்கம், சிறிய அளவிலான ரத்தக்கசிவுப் புள்ளிகள் மற்றும் நுரை கலந்த திரவம் இருந்துள்ளது தெரியவந்துள்ளது.
தடயவியல் ஆய்வு:
மேலும் பரிசோதனைக்காக பாலகிருஷ்ணனின் இரைப்பை, சிறுகுடல், கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மதுரை மண்டல தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. உடலின் பல்வேறு இடங்களில் காயங்கள் பதிவாகியுள்ள நிலையில், இரசாயனப் பகுப்பாய்வு மற்றும் திசுவியல் பரிசோதனை முடிவுகள் கிடைத்த பின்னரே பாலகிருஷ்ணனின் இறப்புக்கான இறுதிக் காரணத்தைத் துல்லியமாகத் தெரிவிக்க முடியும் என மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.