சித்திரை திருவிழாவின் முத்திரை நிகழ்வு... அழகர் கோவிலில் இருந்து.. இன்று கள்ளழகர் புறப்பாடு..!
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குதல் நிகழ்ச்சிக்காக இன்று மாலை ஆறு மணிக்கு தங்க பள்ளக்கில் எழுந்தருளி அழகர் கோவிலில் இருந்து புறப்படுகிறார் கள்ளழகர்.
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்வான மீனாட்சி திருக்கல்யாணம், பட்டாபிஷேகம், திருத்தேரோட்டம், போன்ற நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருளை பெற்றனர். இதனை தொடர்ந்து மதுரை அழகர் கோவில் சித்திரை திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது.
அதாவது நேற்று முன்தினம் மாலை அழகர் எம்பெருமான் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி, மேல தாளங்கள் முழங்க நூபுர கங்கை நீர் வீழ்ச்சியில் தீர்த்தமாடினார் தொடர்ந்து சிறப்பு பூஜைகளும், தீபாரதனைகளும் நடைபெற்றன. இதனை அடுத்து நேற்றும் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெற்றது. இதில் முக்கிய நிகழ்வான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சிக்காக இன்று மாலை ஆறு மணிக்கு தங்க பல்லக்கில் எழுந்தருளி மதுரையை நோக்கி புறப்படுகிறார். இந்தப் பல்லக்கில் கள்ளர் வேடத்தில் எழுந்தருளி வழி நெடுகிலும் உள்ள மண்டபப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார். கள்ளர்களின் வருகையை பக்தர்கள் உற்சாகமாக வரவேற்க தயாராகி வருகின்றனர்.
முன்னதாக, அழகர் கோவிலில் இருந்து புறப்படும் கள்ளழகர் பதினெட்டாம் கருப்பனியிடம் அனுமதி பெற்று அங்கிருந்து 36 கிலோ மீட்டர் பயணம் செய்து 494 மண்டகப்படியில் எழுந்தருள இருக்கிறார். இதற்கிடையே நாளை மாலை தல்லாகுளத்தில் வரும் கள்ளழகரை வீரராகவப் பெருமாள் வரவேற்று எதிர்சேவை நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற உள்ளது.
இதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் திங்கட்கிழமை கள்ளழகர் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி வைகை ஆற்றல் கள்ளழகர் இறங்குதல் நிகழ்ச்சி அதிகாலை 5.45 மணிக்கு மேல் நடைபெறுகிறது. இதில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர் பக்தர்களும் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வர். மதுரையே குலுங்க குலுங்க எங்க பாத்தாலும் பக்தர்கள் தலையாக காணப்படும்.
இதனைத் தொடர்ந்து 13ஆம் தேதி கள்ளழகர், வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலில் இருந்து சேஷ வாகனத்தில் புறப்படுதல், தேனூர் மண்டகப்படியில் கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனி முனிவருக்கு சாப விமோசனம் கொடுத்தல், இரவில் ராமராயர் மண்டபடியில் தசாவதக் காட்சி கொடுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும்.
இதனைத் தொடர்ந்து 14ஆம் தேதி சேதுபதி மண்டபத்தில் பூ பல்லாக்கு அலங்காரத்தில் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார். 15 ஆம் தேதி மீண்டும் கள்ளழகர் அழகர் கோவிலை நோக்கி புறப்படுவார். 15 ஆம் தேதி புறப்படும் கள்ளழகருக்கு வழி நெடுகிலும் திருவிழா கோலம் பூண்டு மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபடுவர். இதனை அடுத்து 16ஆம் தேதி காலை 10 மணிக்கு மேல் மீண்டும் அழகர் கோவிலை சென்றடைவார்.