மதுரை சித்திரை திருவிழா... அன்னதானம் வழங்க விதிமுறைகள் அறிவிப்பு!
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் அன்னதானம் வழங்க விதிமுறைகளை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் மதுரையில் சித்திரைத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டிற்கான சித்திரை திருவிழா ஏப்., 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் மீனாட்சி பட்டாபிஷேகம், திருக்கல்யாணம், தேரோட்டம் ஆகிய முக்கிய நிகழ்வுகளின் போது பக்தர்கள் அதிகளவில் கலந்து கொள்வார்கள். இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு மே 12ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த சித்திரை திருவிழாவிற்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருவதால், அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. சென்ற ஆண்டு 25 லட்சம் பக்தர்கள் திரண்டதாகவும், நடப்பாண்டு 30 லட்சம் பக்தர்கள் திரள்வார்கள் என்று மாநகராட்சி கணித்துள்ளது. இந்த சித்திரை திருவிழாவைக் காண மதுரை மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் வருவதால், அவர்களுக்கு தேவையான உணவு, நீர், மோர் உள்ளிட்டவற்றை வழங்குவதற்கு உரிய அனுமதி பெற வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் சங்கீதா அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,
மதுரை சித்திரை திருவிழாவில் அன்னதானம், நீர், மோர் வழங்குபவர்கள் செயற்கை சாயத்தை சேர்க்க கூடாது. தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள், பிளாஸ்டிக் கப்புகுளை முழுமையாக தவிர்க்க வேண்டும். அன்னதானம் வழங்குபவர்கள் மற்றும் பெறுபவர்கள் கழிவுகளை மாநகராட்சியின் குப்பை தொட்டியில் போட வேண்டும்.
அன்னதானம், நீர்,மோர், குடிநீர் வழங்கும் நபர்கள் https//foscos.fssai.gov.in இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்கு ரூ.100 கட்டணம் செலுத்தி உணவு பாதுகாப்புதுறையின் அனுமதி பெற்று வழங்க வேண்டும். உணவு மற்றும் உணவு பாதுகாப்புதுறையின் அனுமதி பெற்று வழங்க வேண்டும். உணவு மற்றும் உணவு பொருள் தொடர்பான புகார்களுக்கு தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்பு துறையை whatsapp No.9444042322ல் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.