மதுரையில் ரூ. 200 கோடி சொத்துவரி ஊழல்: சிபிஐ விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும்: டாக்டர் அன்புமணி

Meenakshi
Jul 10, 2025,04:59 PM IST

சென்னை:  மதுரை மாநகராட்சியில்  ரூ. 200 கோடி சொத்துவரி ஊழல் நடைபெற்றுள்ளது. இதனை சிபிஐ விசாரணைக்கு மாற்ற அரசு ஆணையிட வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், மதுரை மாநகராட்சியில்  கட்டிடங்களுக்கு சொத்துவரியை நிர்ணயம் செய்வதில் ரூ.200 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பதாக செய்திகள் வெளியாகியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.  தமிழ்நாட்டை அதிர வைத்திருக்கும் இந்த ஊழல் குறித்து விசாரணை நடத்த வேண்டிய தமிழக அரசு,  அதை மூடி மறைக்கும்  முயற்சியில் ஈடுபட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.


மதுரை  மாநகராட்சியின்  2, 3, 4, 5 ஆகிய  மண்டலங்களில்  உள்ள நூற்றுக்கணக்கான  கட்டிடங்களுக்கு சொத்து வரியை குறைத்து நிர்ணயித்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் மதுரை மாநகராட்சிக்கு  ரூ.200 கோடி  அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.  இதைத் தொடர்ந்து திமுகவைச்  சேர்ந்த மாநகராட்சி மண்டலத் தலைவர்களான   சரவண புவனேஷ்வரி, முகேஷ் சர்மா, பாண்டி செல்வி, சுவிதா மற்றும் நிலைக்குழு தலைவர்கள் மூவேந்திரன் (நகர அமைப்பு), விஜயலட்சுமி (வரி விதிப்பு) ஆகியோர் கட்டாயப்படுத்தி பதவி விலக வைக்கப்பட்டுள்ளனர். மதுரை மாநகராட்சி  மேயரின் தனி உதவியாளரும்  மாற்றப்பட்டுள்ளார்.




இந்த முறைகேடு  தொடரபாக ஒய்வு பெற்ற உதவி ஆணையர் ரங்க ராஜன், உதவி வருவாய் அலுவலர் செந்தில் குமரன்  உள்ளிட்ட 8 பேர்  மதுரை மாநகர காவல்துறையின்  மத்தியக் குற்றப்பிரிவால்  கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த முறைகேடு குறித்து  தமிழக அரசு இதுவரை  எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த ஊழலில் உண்மையை  வெளிக்கொண்டு வருவதற்கு பதிலாக  ஊழலை மூடி மறைப்பதில் தான்  திமுக அரசு ஆர்வம் காட்டுகிறது.


திமுக ஆட்சிக்கு பிறகு  175% வரை சொத்து வரி உயர்த்தப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் சொத்துவரி உயர்த்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அப்பாவி மக்களிடம் சுரண்டி எடுக்கும் திமுக அரசு,  பணக்காரர்களிடம் கோடிக்கணக்கில் கையூட்டு  வாங்கிக்  கொண்டு  சொத்துவரியை குறைத்து நிர்ணயிப்பது மக்களுக்கு  இழைக்கப்படும் துரோகம் என்பது மட்டுமின்றி மன்னிக்க முடியாத குற்றமும் ஆகும்.


மதுரை மாநகராட்சி சொத்து வரி ஊழலை  திமுக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மதுரை மாநகரக் காவல்துறை விசாரித்தால்  குற்றவாளிகள் தப்ப வைக்கப்பட்டு விடுவார்கள். எனவே, இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும்; மதுரை மாநகராட்சியை கலைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.