பழனியை தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சொத்திலும் முறைகேடு.. தீவிர விசாரணை
மதுரை: புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறக்கட்டளைக்குச் சொந்தமான ரூ.60 கோடி மதிப்பிலான நிலத்தை முறைகேடாக பட்டா மாற்றம் செய்து, பத்திரப்பதிவு மற்றும் அடமானம் வைத்த வழக்கில் முன்னாள் வட்டாட்சியர், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் உட்பட 19 பேர் மீது மதுரை மாநகர மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
உலகப் புகழ்பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் அறக்கட்டளைக்குச் சொந்தமாக பல்வேறு இடங்களில் சொத்துக்கள் உள்ளன. இதில் மதுரை பகுதியில் அமைந்துள்ள சுமார் 1.79 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தின் சந்தை மதிப்பு தற்போதைய நிலையில் ரூ.60 கோடிக்கும் மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த அரிய கோயில் சொத்தை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி, அரசு அதிகாரிகளின் துணையோடு போலியான ஆவணங்களை உருவாக்கி, தனி நபர்களின் பெயருக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், அந்த நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்து, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் அடமானம் வைத்து பல கோடிகளை மோசடி செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்திய மதுரை மாநகர மத்திய குற்றப்பிரிவு (CCB) காவல்துறையினர், ஜூலை 25 அன்று முறைப்படி முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தனர். இந்த மோசடி சம்பவத்தில் அரசு வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு நேரடித் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
அதனடிப்படையில் முன்னாள் வட்டாட்சியர் அன்பழகன், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் (VAO) அரசன், நிலத்தை முறைகேடாக ஆக்கிரமித்து அடமானம் வைத்த தனிநபர்கள் உட்பட மொத்தம் 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 420 (ஏமாற்றுதல் மற்றும் மோசடி செய்தல்), 120B (குற்றச்சதி திட்டமிடுதல்) உள்ளிட்ட முக்கியப் பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த முறைகேடு சம்பவங்கள் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் திட்டமிடப்பட்டு நடைபெற்று வந்துள்ளதை காவல் துறையினரின் முதல் தகவல் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
தீவிர விசாரணை:
கோயில் நிலங்களை மீட்கும் நடவடிக்கையில் இந்து சமய அறநிலையத்துறையும், காவல்துறையும் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், அரசு அதிகாரிகளே கூட்டுச் சேர்ந்து ரூ.60 கோடி மதிப்பிலான திருக்கோயில் நிலத்தை மோசடி செய்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பையும், பக்தர்களிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களைக் கைது செய்யவும், போலி ஆவணங்கள் மூலம் கைமாறிய நிலத்தை மீண்டும் கோயில் கணக்கில் கொண்டு வரவும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே பழனி தண்டாயுதபாணி கோவிலுக்கு சொந்தமான 1.5 ஏக்கர் நிலத்தை தனி நபர்களின் பெயரில் முறைகேடாக பத்திரப்பதிவு செய்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பூதாகரமாக மாறி சலசலப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களிலும் முறைகேடு நடந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.