மதுரை சித்திரை திருவிழா 2026 எப்போது ? தேதி முழு விபரங்கள் இதோ
மதுரை : மதுரை என்றாலே நம் நினைவுக்கு வருவது சித்திரை மாதத்துக் கொண்டாட்டங்கள்தான். உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலின் பிரம்மாண்டமும், அங்கு ஆண்டு முழுவதும் நடைபெறும் திருவிழாக்களும் மதுரைக்குத் தனிச்சிறப்பு சேர்க்கின்றன. குறிப்பாக, சைவம் மற்றும் வைணவம் ஆகிய இரு சமயங்களையும் இணைக்கும் உன்னத விழாவாக இந்தச் சித்திரைத் திருவிழா திகழ்கிறது.
உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அதிகமான நாட்கள் நடைபெறும் விழாவான சித்திரை திருவிழாவில் நாள்தோறும் சிவனபெருமானின் திருவிளையாடல்கள் நிகழ்த்திக் காட்டப்படும். தினந்தோறும் மாலையில் அம்பாளும், சுவாமியும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா வருவார்கள். மீனாட்சி அம்மனையும். சுந்தரேஸ்வரரையும் தரிசனம் செய்வதற்கு ஏராளமான பொது மக்கள் கூடுவார்கள்.
மீனாட்சி அம்மன் கோவிலின் முதல் 10 நாள் உற்சவங்களும், அதனைத் தொடர்ந்து அழகர் கோவிலின் 10 நாள் உற்சவங்களும் என மொத்தம் 20 நாட்கள் மதுரையே விழாக்கோலம் பூணும். 20 நாட்கள் விழாவாக நடைபெற்றாலும் இதில் உச்ச நிகழ்வுகளாக கருதப்படுபவை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வும் தான்.இந்த 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகள் குறித்த விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.
மதுரை சித்திரை திருவிழா 2026 :
ஏப்ரல் 19 - கொடியேற்றம், கற்பக விருட்சம் & சிம்ம வாகனம்
ஏப்ரல் 20 - பூத வாகனம் & அன்ன வாகனம்
ஏப்ரல் 21 - கைலாச பர்வதம் & காமதேனு வாகனம்
ஏப்ரல் 22 - தங்க பல்லக்கு உலா
ஏப்ரல் 23 - தங்க குதிரை வாகனம் (வேடர் பாரி லீலை)
ஏப்ரல் 24 - தங்க ரிஷபம் & வெள்ளி ரிஷப வாகன உலா
ஏப்ரல் 25 - நந்திகேஸ்வரர் & யாளி வாகனம்
ஏப்ரல் 26 - மீனாட்சி பட்டாபிஷேகம் (வெள்ளி சிம்ஹாசனம்)
ஏப்ரல் 27 - மீனாட்சி திக் விஜயம் (இந்திர விமானம்)
ஏப்ரல் 28 - மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்
ஏப்ரல் 29 - மாசி வீதிகளில் தேரோட்டம் & கள்ளழகர் மதுரை புறப்பாடு
ஏப்ரல் 30 - கள்ளழகர் எதிர் சேவை
மே 01 - வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளல்
மே 02 - தசாவதாரம் திருக்கோலம்
மே 04 - கள்ளழகர் அழகர்மலைக்குத் திரும்புதல் (புஷ்ப பல்லக்கு)
மே 05 - கள்ளழகர் இருப்பிடம் (திருமாலிருஞ்சோலை) வந்து சேருதல்