பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் விளம்பரங்கள் குறித்து மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் மெட்ரோ நிறவனத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் சிறப்பான பொதுப் போக்குவரத்து சேவைகளை வழங்கி வரும் அதேவேளையில், அதன் நிலையங்கள் மற்றும் இரயில்களுக்கு உள்ளே வைக்கப்பட்டுள்ள சில விளம்பரங்கள் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் நாகரிக சமூகத்திற்கு எதிரானதாகவும் உள்ளன.
குறிப்பாக, மெட்ரோ இரயிலுக்குள் வைக்கப்பட்டுள்ள ஒரு நிதி நிறுவனத்தின் விளம்பரத்தில், “பெண் நண்பர் (Girlfriend) 0% வட்டி தரலாம்...” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய விளம்பரம் பெண்களின் கண்ணியத்தையும் சுயமரியாதையையும் கேள்விக்குள்ளாக்குவதுடன், ஆழமான ஆணாதிக்க மனப்பான்மையையும் பிரதிபலிக்கிறது.
பெண்களைத் தரக்குறைவாக நடத்தும் மற்றும் அவர்களை வெறும் பொருளாகச் சித்தரிக்கும் இந்த விளம்பரம் கடும் கண்டனத்திற்குரியது.
மெட்ரோ இரயில் நிர்வாகம் இத்தகைய விளம்பரத்தை எப்படி அனுமதித்தது என்பது கேள்விக்குரியது. இந்த விளம்பரத்தை உடனடியாக அகற்றுமாறும், இதனைத் காட்சிப்படுத்த அனுமதிக்கப்பட்டதற்குப் பொறுப்பானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று சு. வெங்கடேசன் கூறியுள்ளார்.