மதுரை அரசியலில் திடீர் பரபரப்பு.. அதிமுகவுக்குத் தாவி வந்தார் அழகிரி ஆதரவாளரான மன்னன்!
சென்னை: மதுரை அரசியலில் இன்று ஒரு பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. திமுகவில் ஒரு காலத்தில் முக்கியப் புள்ளியாக செயல்பட்டு வந்தவரும், மதுரை மாநகராட்சியின் துணை மேயராக இருந்தவரும், மறைந்த கலைஞரின் மகனும், தென் மாவட்ட திமுக ஸ்டிராங்மேன் ஆக வலம் வந்தவருமான மு.க.அழகிரியின் வலது கரமான பி.எம். மன்னன் இன்று திடீரென அதிமுகவில் இணைந்து விட்டார்.
மு.க.அழகிரி ஒரு காலத்தில் தென் மாவட்ட திமுகவில் அசைக்க முடியாத மாமன்னராக வலம் வந்தவர். அவரது தளபதிகளில் ஒருவர்தான் பி.எம். மன்னன். மு.க.அழகிரி வட்டாரம் அப்போது மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் திமுகவை வழி நடத்தி வந்தது. இந்த சமயத்தில்தான் தினகரன் நாளிதழில் ஒரு கருத்துக் கணிப்பு வெளியாகி திமுக வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியது.
இந்த கருத்துக் கணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் உள்ள தினகரன் அலுவலகத்தை அழகிரி ஆதரவாளர்கள் தீ வைத்துக் கொளுத்தினர். இதில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்குப் பின்னர் மு.க.அழகிரி, திமுகவை விட்டு நீக்கப்பட்டார். அதன் பின்னர் அழகிரியின் ஆதிக்கம், மதுரை திமுகவில் விலகிப் போய் விட்டது. தற்போது அழகிரி திமுகவிலும் இல்லை, தீவிர அரசியலிலும் இல்லை.
அழகிரியுடன் நிழலாக வலம் வந்தவர்களான முபாரக் மந்திரி, தளபதி, பி.எம். மன்னன், எஸ்ஸார் கோபி உள்ளிட்டோர் பின்னர் செயலிழந்து போயினர். இதில் தளபதி மீண்டும் திமுகவில் இணைந்தார். தற்போது எம்எல்ஏவாக உள்ளார். பி.எம். மன்னன் மீண்டும் திமுகவில் இணைய தீவிரமாக முயற்சித்து வந்தார். அவர் உள்ளிட்ட தனது ஆதரவாளர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க, வேண்டும் என்று மு.க.அழகிரியும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார்.
ஆனால் பி.எம் மன்னன் உள்ளிட்டோரை மீண்டும் கட்சியில் சேர்க்க மதுரை திமுகவில் சிலர் கடும் ஆட்சேபனை தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க தலைமையும் யோசித்து வந்தது. சில மாதங்களுக்கு முன்பு மதுரைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்தபோது தனது அண்ணன் அழகிரியை அவரது வீட்டில் போய் சந்தித்துப் பேசி விட்டு வந்தார். அப்போது, பி. எம். மன்னன் முதல்வரை நேரில் சந்தித்து தனது கோரிக்கையை வைத்திருந்தார். அதன் பின்னும் கூட அவருக்கு எந்த வழியும் பிறக்கவில்லை.
தை பிறந்தால் வழி பிறக்கும் என காத்திருந்த மன்னன் தொடர்ந்து ஏமாற்றத்தையே சந்தித்து வந்ததால், மாசி பிறந்த இந்த நேரத்தில் கட்சியை மாற்றி விட்டார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார் பி. எம். மன்னன்.
தென் தமிழகத்தில், குறிப்பாக மதுரையில் மன்னனுக்கு ஒரு குறிப்பிட்ட செல்வாக்கு உள்ளது. ஒரு ஆக்டிவான தளகர்த்தா அவர். சென்னையில் பி.கே.சேகர்பாபு, போல மதுரையில் மன்னனைக் குறிப்பிடலாம். உள்ளூர் அரசியலில் கில்லியாக வலம் வந்தவர். அப்படிப்பட்டவர், சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அதிமுகவுக்கு வந்திருப்பது, மதுரையில் அதிமுகவிற்கு கூடுதல் பலத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அழகிரி ஆதரவாளர்கள் அடுத்தடுத்து மாற்றுக் கட்சிகளுக்கு செல்வது மதுரையில் ஒரு சுவாரசியமான அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.