2வது மாநில மாநாடு.. விஜய் போடும் செம ஸ்கெட்ச்... கோர்ட்டிற்கு செல்லுமா தவெக.. என்ன செய்யும் திமுக?

Su.tha Arivalagan
Aug 04, 2025,11:00 AM IST

மதுரை: விஜய்யின் தவெக கட்சி மதுரையில் ஆகஸ்ட் 25ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ள மாநாட்டிற்கு போலீசார் தரப்பில் இதுவரை அனுமதி வழங்கப்படாததால் அடுத்த கட்டமாக கோர்ட்டில் சென்று முறையிட தவெக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்போது திமுக.,வும், போலீசாரும் என்ன செய்ய போகிறார்கள் என்பதை பார்க்க அனைவருமே ஆர்வமாக காத்திருப்பதால் இப்போது மக்களின் கவனமும் விஜய் பக்கம் திரும்ப துவங்கி உள்ளது.


தவெக மாநாடு தொடர்பாக 20க்கும் மேற்பட்ட கேள்விகளை காவல்துறை எழுப்பியிருப்பதாக தெரிகிறது. மேலும் விநாயகர் சதுர்த்தி ஆகஸ்ட் 27ம் தேதி வருவதால் பாதுகாப்புக்கு போதுமான காவல்துறையினர் தேவை என்பதால் மாநாட்டுத் தேதியை மாற்றியமைக்க முடியுமா என்று தவெகவுக்கு காவல்துறை கோரிக்கை வைத்திருப்பதாகவும் தெரிகிறது.


கடந்த ஆண்டு விக்கிரவாண்டியில் முதல் மாநில மாநாட்டை பிரம்மாண்டமாகவும், வெற்றிகரமாகவும் நடத்தி முடித்து விட்டது தவெக. அந்த மாநாட்டில் விஜய் பேசிய பேச்சும், மாநாட்டிற்கு திரண்ட இளைஞர்கள் கூட்டமும் பல மாதங்களாக தமிழக அரசியலில் பேசு பொருளாக இருந்து வந்தது. இப்போது அடுத்த கட்டமாக தனது 2வது மாநில மாநாட்டை மதுரையில் நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார். மாநாட்டிற்கான வேலைகள் படுதீவிரமாக கடந்த 15 நாட்களுக்கும் மேலாக நடந்து வருகிறது. லேட்டஸ்ட் தகவல்களின் படி தினமும் 5000 பேர், தவெக மாநாடு நடக்க போகும் பாரபத்தி பகுதியில் மாநாட்டுத் திடலில் மாநாட்டிற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


பார்த்துப் பார்த்து நடக்கும் ஏற்பாடுகள்




விக்கிரவாண்டி மாநாட்டின் போது பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி முதலில் போலீசார் மாநாட்டிற்கு அனுமதி மறுத்தனர். இதனால் விஜய் கட்சி மாநாட்டு தேதியை கடைசி நேரத்தில் மாற்றி, போலீசார் விதித்த நிபந்தனைகளின் படி ஏற்பாடு செய்து, ஒரு வழியாக மாநாட்டை நடத்தினார்கள். அதனால் இந்த முறையும் அப்படி எந்த சிக்கலும் வந்து விடக் கூடாது என்பதில் விஜய் மிக தெளிவாகவும், உறுதியாகவும் இருப்பதால் மாநாட்டில் ஒவ்வொரு ஏற்பாடும் மிக கவனமுடன் செய்யப்பட்டு வருகிறது. 


கிட்டதட்ட 450 ஏக்கரில் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளதாம். இதில் வாகனங்கள் நிறுத்துவதற்கு மட்டும் 300 ஏக்கரை ஒதுக்கி விட்டு, மீதமுள்ள 150 ஏக்கரில் மாநாட்டை நடத்த போகிறார்களாம். மருத்துவ உதவி தேவைப்பட்டால் மாநாட்டு பகுதிக்கு ஆம்புலன்ஸ் வருவதில் சிக்கல் ஏற்படக் கூடாது என்பதால் அனைத்து வசதிகளையும் மாநாட்டு திடலிலேயே செய்து வருகிறார்களாம். அதே போல் மாநாட்டில் வருபவர்களுக்கு குடிநீர் வசதி கடந்த மாநாட்டில் முக்கிய பிரச்சனையாக பேசப்பட்டதால் மாநாட்டு பந்தலிலேயே சிறிய போர்வெல் போடப்பட்டு, 3 கி.மீ., தூரத்திற்கு முன்பே தண்ணீர் லாரிகள் நிறுத்தப்பட்டு, அங்கிருந்து பைப் மூலம் மாநாடு நடக்கும் இடத்திற்கு குடிநீர் விநியோகம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் மிக கவனமாக செய்து வருகிறார்கள்.


இருந்தாலும் ஜூலை 15 ம் தேதி தவெக சார்பில் மாநாட்டிற்கு அனுமதி கேட்டு அளிக்கப்பட்ட மனுவிற்கு இதுவரை போலீசார் தரப்பு அனுமதி தரவில்லை. மேலிடத்தில் இருந்து உத்தரவு வரவில்லை என்றும், மாநாடு முடிந்த 2வது நாள், அதாவது ஆகஸ்ட் 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி வருவதாலும் போலீசார் ஓய்வு இல்லாமல் தொடர்ந்து பணியாற்ற முடியாது என்பதையும் காரணமாக சொல்லி தான் இதுவரை அனுமதி தரவில்லை என சொல்லப்படுகிறது. இப்போது போலீசார் அனுமதி மறுத்தாலும், அனுமதி அளிக்க தாமதித்தாலும் தவெக நேரடியாக கோர்ட்டிற்கு சென்று முறையிடும். அனைத்து ஏற்பாடுகளும் பக்காவாக இருப்பதால் கண்டிப்பாக கோர்ட்டில், தவெக மாநாட்டிற்கு அனுமதி கிடைத்து, போலீசார் பாதுகாப்பு தர உத்தரவு வந்து விடும்.


பல லட்சம் பேர் வருவார்கள் என கணிப்பு




போலீசாரின் கணிப்பு படியும், தவெக.,வின் கணிப்பு படியும் மாநாட்டிற்கு 12 முதல் 15 லட்சம் பேர் வரை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி வந்தால் அது திமுக.,விற்கு நெருக்கடியாக இருக்கும். இதனால் மாநாட்டை நடத்த விடாமல் செய்வதற்காக தான் அனுமதி வழங்க போலீசார் இழுத்தடிப்பதாக தவெக தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது. ஆனால் மாநாட்டிற்கு அனுமதி அளிக்க மறுப்பு தெரிவித்தாலும், தொடர்ந்து அனுமதி தர தாமதப்படுத்தினாலும், கோர்ட் உத்தரவுடன் மாநாடு நடந்தாலும் அது போலீசார் மீதான மக்களுக்கு அதிருப்தி ஏற்படும். கெட்ட பெயரும் வந்து விடும். போலீசார் மீதான அதிருப்தியும், கோபமும் திமுக மீது திரும்பவும் வாய்ப்புள்ளது. 


விஜய்க்கு மக்களிடம் இருக்கும் செல்வாக்கை தடுக்கவும் வேண்டும், அதே சமயம் மக்களின் அதிருப்தி தங்கள் பக்கம் திரும்பாமலும் இருக்க வேண்டும். அதோடு சமீப காலமாக தமிழகத்தில் நடக்கும் அடுத்தடுத்த மரண சம்பவங்களால் மக்களுக்கு போலீசார் மீது இருக்கும் அதிருப்தியும் அதிகமாகி விடக் கூடாது. இதற்கு திமுக., கட்சியும், தமிழக அரசும் அடுத்து என்ன செய்ய போகிறது?  இந்த நெருக்கடியான சூழலை திமுக எப்படி கையாள போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.