மதுரை Rapido ஆட்டோ சேவையில் கட்டண குழப்பம்.. ஆப் காட்டிய கட்டணம் ஒன்று.. டிரைவர் கேட்பது வேறு!
மதுரை: மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து அரவிந்த் கண் மருத்துவமனைக்கு செல்ல Rapido செயலியில் ரூபாய் 72 என கட்டணம் காட்டப்பட்ட நிலையில், ஆட்டோ ஓட்டுநர் ரூபாய் 150 கேட்டதால் பயணிகள் அவதிக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது பற்றி பயணிகள் கூறுகையில், செயலியில் முன்பதிவு செய்த போது குறைந்த கட்டணம் காண்பிக்கப்பட்டது. ஆனால், இடத்திற்கு வந்த ஆட்டோ ஓட்டுநர் செயலியில் காட்டிய தொகையை ஏற்க மறுத்து, அதற்கும் இரட்டிப்பு தொகையை கேட்டுள்ளார். பயணிகள் அதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில், ஓட்டுநர் பயணத்தை ரத்து செய்து அங்கிருந்து சென்றுவிட்டார். இதனால் பயணிகளுக்கு நேர விரயம் ஏற்பட்டதுடன், மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அவசர தேவைக்காக மருத்துவமனை செல்ல முயன்ற பயணிகள் பெரும் சிரமத்தை சந்தித்ததாக கூறப்படுகிறது.
மேலும், செயலியில் காட்டப்படும் கட்டணத்தை விட அதிக தொகையை கேட்பது பல ஆட்டோ ஓட்டுநர்களிடமும் வழக்கமாகி விட்டதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். இது போன்ற செயல்கள் பயணிகளின் நம்பிக்கையை பாதிப்பதோடு, ஆன்லைன் போக்குவரத்து சேவைகளின் நம்பகத் தன்மையையும் கேள்விக் குறியாக்குகிறது.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட நிறுவனம் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து, செயலியில் காட்டப்படும் கட்டணத்திற்கே பயண சேவை வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.