மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அதிமுக.,வில் விருப்பமனு விநியோகம் தொடக்கம்

Su.tha Arivalagan
Sep 08, 2026,11:32 AM IST

சென்னை:தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்பமனு அளிக்கலாம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.


தமிழகத்தில் தற்போது வரை காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் அக்டோபர் 06ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும், இதில் பதிலாகும் ஓட்டுக்கள் அக்டோபர் 10ம் தேதியன்று எண்ணப்படும் என்றும் தேர்தல் கமிஷன் நேற்று அறிவிப்பு வெளியிட்டிருந்தது.


3 நாட்கள் விருப்பமனு விநியோகம்:




இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளராகப் போட்டியிட விரும்பும் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இன்று (செப்டம்பர் 8) முதல் அடுத்த 3 நாட்களுக்கு விருப்பமனு அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான 'எம்.ஜி.ஆர் மாளிகையில்' இந்த விருப்பமனுக்கள் விநியோகிக்கப்பட உள்ளன. விருப்பமனுக்களைப் பெற்று, பூர்த்தி செய்து உரிய கட்டணத்துடன் தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


அதிமுக தீவிர ஆலோசனை:


இடைத்தேர்தல் தேதி குறித்த அறிவிப்புகள் வெளியானதைத் தொடர்ந்து, அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளை வேகப்படுத்தத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், அதிமுக தலைமை விரைவாக விருப்பமனு விநியோகத்தைத் தொடங்கியுள்ளது கட்சித் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருப்பமனுத் தாக்கல் நிறைவடைந்தவுடன், பெறப்பட்ட மனுக்கள் மீது அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் பரிசீலனை செய்வார்கள். அதன் பிறகு, திறமையான மற்றும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ள வேட்பாளர்களைக் கட்சியின் நாடாளுமன்றக் குழு கூடி முறைப்படி தேர்வு செய்து அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் கூடுதல் கவனம் செலுத்தி பிரச்சார வியூகங்களை வகுக்க அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளது.


தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு தொகுதிகளுமே அதிமுக வெற்றி பெற்ற தொகுதிகள். அதனால் மீண்டும் அந்த தொகுதிகளை கைப்பற்றி தங்களின் பலத்தை மீண்டும் தக்க வைக்க அதிமுக கடும் முயற்சி செய்து வருகிறது. அதே சமயம், ஏற்கனவே இருக்கும் 107 எம்எல்ஏ.,க்கள் பலத்துடன், இந்த இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றால் சட்டசபையில் தங்கள் கட்சி எம்எல்ஏ.,க்களின் பலம் 109 ஆக அதிகரிக்கும். இதனால் சட்டசபையில் தங்களின் பலம் அதிகரிக்கும் என ஆளும் கட்சியான தவெக நினைப்பதால் இடைத்தேர்தலில் அனைத்து இடங்களையும் கைப்பற்ற தீவிர வியூகம் வகுத்து வருகிறது.