ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
- கவிஞாயிறு இரா. கலைச்செல்வி
ஆம். மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
என்ன உரிமை ? எதற்காக வேண்டும்?
ஆண், பெண் சரி நிகர் சமான உரிமை வேண்டும்..!!
அவள் அவளாக இருக்க உரிமை வேண்டும் ..!!
பத்துக்கும் ஐந்துக்கும் ஆணை சார்ந்து .!!
பரிதவிக்கும் நிலை மாற ,
படித்து, ஆணுக்கு நிகராக சம்பாதிக்க ..!!
பாடுபடும் பெண்களுக்கு ,
சமையல் கடமையோடு இன்று
சேர்ந்து விட்டது அலுவலகக் கடமையும் .
சம்பாதிக்க ஆரம்பித்தும் ,சமையல் கட்டு மட்டும்
சாகிற வரை அவளை விடுவதாய் இல்லை .
ஞாயிறு என்றால் அனைவருக்கும் ஓய்வு..!!
ஞாயிறு என்றால் அவளுக்கு இரட்டிப்பு வேலை..!!
அணுக்கு நிகராக உழைக்கும் அவளுக்கும் ,
அந்த ஒரு நாள் ஓய்வு எடுக்க உரிமை வேண்டும்.
மலர் என்றோ, நிலவு என்றோ,
சரஸ்வதி என்றோ, லெஷ்மி என்றோ,
அவளை வர்ணிக்க வேண்டாம்..!!
அவளை அவமதிக்கும் தீய சொற்களை
அகராதியில் இருந்து அகற்றினாலே போதும். .!!
அது இன்றேல்..!!
விதவை ,வாழாவெட்டி , வேசி,பரந்தை என்ற
விகற்ப சொற்களுக்கு ஏற்ற எதிர்பால் சொல்லை
அகராதியில் சேர்க்க அவளுக்கு உரிமை வேண்டும்..!!
பெண் போகப் பொருள் அல்ல. அவள்
உணர்வுள்ள மனுஷியாய் வாழ உரிமை வேண்டும்..!!
பெண்ணுக்கு எதிரான வன் கொடுமைகள்
அனைத்தையும் வேரறுக்க உரிமை வேண்டும்..!!
(எழுத்தாளர் பற்றி... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார். கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். சாதனைப் பெண், தங்கத் தாரகை, கவிஞாயிறு உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்).