இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்...ரிக்டரில் 6.6 ஆக பதிவு
ஜகர்த்தா : இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள அச்சே அருகே இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இத ரிக்டர் ்ளவு கோலில் 6.6 ஆக பதிவாகி உள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் அதிர்வுகள் பரவின. இந்த நிலநடுக்கம் சுமார் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதால், கடலோர மற்றும் உள்நாட்டுப் பகுதிகள் குலுங்கின. இருப்பினும், இந்தோனேசியாவின் வானிலை ஆய்வு மையம் (BMKG) சுனாமி ஆபத்து எதுவும் இல்லை என உறுதிப்படுத்தியுள்ளது. இதுவரை எந்த சேதமோ, உயிரிழப்போ பதிவாகவில்லை.
பசிபிக் பெருங்கடலின் "ரிங் ஆஃப் ஃபயர்" எனப்படும் எரிமலை மற்றும் நிலநடுக்கப் பகுதியில் இந்தோனேசியா அமைந்துள்ளதால், இங்கு அடிக்கடி பல்வேறு அளவுகளில் நிலநடுக்கங்கள் ஏற்படுவது வழக்கம். அச்சே மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில் தற்போது நிலநடுக்கம் வந்துள்ளது. ராய்ட்டர்ஸ் அறிக்கையின்படி, வட சுமத்ரா மாகாணத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் குறைந்தது 28 பேர் உயிரிழந்துள்ளனர். சாலைகள் மற்றும் தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டதால், மீட்புப் பணிகளும் பாதிக்கப்பட்டன.
இதற்கிடையில், இன்று "சென்யார்" என்ற அரிதான வெப்பமண்டல புயல் சுமத்ராவை தாக்கியது. இதனால் மலாக்கா ஜலசந்தியின் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி, நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது என அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மலேசியா, இந்தோனேசியா மற்றும் அந்தமான் கடலுக்கு இடையில் அமைந்துள்ள மலாக்கா ஜலசந்தியில் தீவிரமடைந்து வரும் இந்த புயல், வானிலை ஆய்வாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், இது நிபுணர்கள் மற்றும் எக்ஸ் தளத்தில் உள்ள வானிலை பதிவர்களிடையே பரவலான விவாதத்தைத் தூண்டியுள்ளது. பலர் இதை "அரிதிலும் அரிதான" நிகழ்வு என்று அழைக்கின்றனர்.
பூமத்திய ரேகைக்கு மிக அருகில், அதாவது 5°N க்குள் வெப்பமண்டல அமைப்புகள் உருவாவது கிட்டத்தட்ட கேள்விப்படாத ஒன்று. வானிலை பதிவர் மைக்கேல் ஃபெராக்மோ குறிப்பிடுகையில், இங்கு இதுபோன்ற ஒரு புயல் மட்டுமே 2001 இல் "Vamei" என்ற பெயரில் பதிவாகியுள்ளது. இப்போது, Invest 95B ஆனது Cyclone 04B ஆக வலுப்பெற்று, மணிக்கு 45 கடல் மைல் வேகத்திலும், 996mb மைய அழுத்தத்துடனும் சுழல்கிறது.