இலங்கையில் மகா சிவராத்திரி விழா.. முதன்முறையாக செந்தமிழ் திருமுறை வழிபாட்டுடன் அபிஷேகம்!

Su.tha Arivalagan
Feb 14, 2026,01:53 PM IST

கொட்டகலை, இலங்கை: இலங்கையின் கொட்டகலை மாநகரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்து விநாயகர் சுவாமி ஆலயத்தில், இந்த ஆண்டு மகா சிவராத்திரி பெருவிழா மிகவும் விசேஷமான முறையில் நடைபெற உள்ளது. 


சிவமே திருமுறை, திருமுறையே சிவம் என்ற உயரிய நோக்கில், வரலாற்றிலேயே முதன்முறையாக செந்தமிழ் திருமுறைப் பண்ணிசையோடு சிவலிங்கத் திருமேனிக்கு நேரடி அபிஷேக ஆராதனைகள் நடைபெற இருப்பது பக்தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


இந்தச் சைவப் பெருவிழாவிற்கு, தென்னிந்தியாவின் பிரபல "செந்தமிழ் மந்திர வித்தகர்" திருவில்லிப்புத்தூர் சிவ.வெ. மோகனசுந்தரம் அடிகளார் தலைமை தாங்கி, சிவலிங்கத்திற்கு நேரடி அபிஷேக ஆராதனைகளை முன்னின்று நடத்த உள்ளார். 


அவருடன் தென்தமிழகத்தின் சிறந்த பக்க இசைக்கலைஞர்கள் இணைந்து வழங்கும் 'திருமுறைப் பண்ணிசை' நிகழ்வு பக்தர்களுக்கு இசை விருந்தாகவும், இறை அனுபவமாகவும் அமையவுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆன்மீகச் சிந்தனைகளைத் தூண்டும் சிறப்பு சமயச் சொற்பொழிவுகளும் நடைபெறவுள்ளன. இந்த நிகழ்வுக்கு திருமுறைப் புரட்சி வேந்தர், முனைவர் திருவிடைமருதூர் சிவ.ச. நடராஜ தேசிகர் தலைமை தாங்கவுள்ளார்.





இந்த பிரம்மாண்ட நிகழ்வை 'இராவணா சிவபூமி' வழிபாட்டு குழுமத்தின் தலைவரும், சிவயாத்ரா அமைப்பாளருமான சிவானந்தன் (இலங்கை சிவா) முன்னெடுத்துள்ளார். 


இந்த இறைப்பணியில் சுரேஷ் (இந்து குருமார் ஒன்றியச் செயலாளர்), சிவத்திரு. கணேசன் ஐயா & ஆனந்தகுமார் ஐயா ஆகியோரும் ஈடுபட்டுள்ளனர். இவர்களோடு இணைந்து பணியாற்றும் இலங்கை வாழ் தமிழ் நெஞ்சங்களுக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.


மலேசியா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த சிவத்தொண்டர்கள் இந்த நிகழ்விற்குப் பெரும் பொருளுதவி செய்துள்ளனர். குறிப்பாக, நாகை இராஜசேகர் சிவம் ஐயா & நாகை மீனாட்சி, மலேசியா சிவ. கங்காதரன் ஐயா & சிவத்திரு. கமலநாதன் முனுசாமி ஐயா ஆகியோரின் பங்களிப்புடன் இச்சைவப் பெருவிழா உலக அரங்கில் தமிழின் பெருமையை நிலைநாட்டும் வகையில் அமையவுள்ளது.


"முற்பிறவியில் சிவபுண்ணியம் செய்தவர்களுக்கே சிவனைச் சிந்திக்கும் பாக்கியம் கிட்டும்" என்ற நாயன்மார்களின் வாக்குப்படி, இலங்கை வாழ் தமிழ் மக்கள் மற்றும் சிவனடியார்கள் அனைவரும் இந்த அரிய நிகழ்வில் கலந்துகொண்டு சிவகிருபையைப் பெற வேண்டும் என செந்தமிழ் சிவ அறநெறி சைவசமய புரட்சிப் பேரியக்கம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


மேலதிக விபரங்களுக்கு முனைவர் சிவ.ச. நடராஜதேசிகர் (இந்தியா): +91 9788065610, 9488055610, இலங்கை சிவா (இலங்கை): +94 773833902 ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.