அண்ணாமலை பேச்சை பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.. மகாராஷ்டிரா முதல்வர்

Su.tha Arivalagan
Jan 13, 2026,01:55 PM IST

மும்பை: மும்பை நகரம் குறித்து தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்த கருத்துக்களைப் பெரிதுபடுத்தத் தேவையில்லை. அவருக்கு இந்தி தெரியாது. அவரது பேச்சை இப்படி தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.


மும்பை மாநகராட்சி தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த அண்ணாமலை, மும்பை மகாராஷ்டிராவிற்குச் சொந்தமான நகரம் அல்ல. அது சர்வதேச நகரம் என்று கூறியிருந்தார். இது அங்கு பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அண்ணாமலைக்கு தாக்கரேவின் கட்சிகள் கடும் கண்டனமும், எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். அண்ணாமலை மும்பைக்குள் காலெடுத்து வைக்க முடியாது. வைத்தால் வெட்டுவோம் என்றும் அவர்கள் மிரட்டியுள்ளனர்.




ஆனால் அண்ணாமலை இதை புறம் தள்ளியுள்ளார். மீண்டும் மும்பைக்கு வருவேன். முடிந்தால் காலை வெட்டுங்கள், பார்க்கலாம் என்று சவால் விடுத்துள்ளார். இதனால் பரபரப்பு கூடியுள்ளது. 


இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மகாராஷ்டிர முதல்வர் பட்னாவிஸ் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், அண்ணாமலைக்கு ஹிந்தி சரளமாக வராது. அந்தப் பதற்றத்தில் ஏற்பட்ட தவறான சொல்லாடலே இது. சென்னைக்கு பதிலாக 'மெட்ராஸ்' என்று சொல்வதைப் போன்றதுதான் இது. அண்ணாமலை மகாராஷ்டிராவைச் சேர்ந்தவரோ அல்லது தேசிய அளவிலான பாஜக தலைவரோ அல்ல. எனவே, அவரது தனிப்பட்ட கருத்தை மிகைப்படுத்த வேண்டிய அவசியமில்லை.


மும்பை ஒரு சர்வதேச நகரம் என்ற ரீதியிலேயே அவர் பேசினார், அதைத் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம் என்று மகாராஷ்டிர முதல்வர் பட்னாவிஸ் கூறியுள்ளார்.