மகாராஷ்டிராவை அதிர வைத்த அஜீத் பவார் விமான விபத்து.. மறக்க முடியாத தலைவர்!
மும்பை: மகாராஷ்டிராவை மட்டுமல்லாமல் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவார் விமான விபத்து சம்பவம். மகாராஷ்டிர மக்கள் மட்டுமல்லாமல் தேசிய அளவில் மறக்க முடியாத ஒரு தலைவராக திகழ்ந்தவர் அஜீத் பவார் என்பதால் அவரது இந்த முடிவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர அரசியலில் செல்வாக்கு மிக்க தலைவராக வலம் வந்தவர்களில் அஜீத் பவாரும் ஒருவர். அசைக்க முடியாத சக்தியாக தன்னை அங்கு நிலை நிறுத்திக் கொண்டவர். சரத் பவார் என்ற மிகப் பெரிய ஆளுமையின் நிழலில் வளர்ந்தவர் என்றாலும் கூட அவரைத் தாண்டி வளர்ந்து தன்னை ஒரு ஆளுமையாக மாற்றிக் காட்டியவர் அஜீத் பவார்.
ஜூலை 22ம் தேதி 1959ம் ஆண்டு மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள தேவலாலி பிரவரா என்ற இடத்தில் பிறந்தவர் அஜீத் பவார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத் பவாரின் மூத்த சகோதரர் அனந்த்ராவ் பவாரின் மகன் ஆவார். அதாவது சரத் பவார், அஜீத் பவாரின் சித்தப்பா ஆவார்.
மும்பையில் தனது பள்ளிப்படிப்பை முடித்த அஜித் பவார், குடும்பத் தொழிலான விவசாயம் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் தனது கவனத்தைச் செலுத்தத் தொடங்கினார்.
தாதா அதாவது அண்ணா என்று தனது ஆதரவாளர்களால் அன்போடு அழைக்கப்பட்ட அஜீத் பவார் அடிப்படையில் கூட்டுறவு சங்க அரசியல்வாதியாக இருந்தவர். 1982 இல் சர்க்கரை கூட்டுறவு சங்கத் தேர்தலில் வென்று அரசியலில் நுழைந்தார். அவரை ஒரு அரசியல் தலைவராக வார்த்தெடுத்த பெருமை அவரது சித்தப்பா சரத் பவாருக்கே உண்டு. பார்த்துப் பார்த்து அஜீத் பவாரை வளர்த்தவர் சரத் பவார்.
1991 இல் முதன்முதலில் பாராமதி மக்களவைத் தொகுதியில் இருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் தனது சித்தப்பா சரத் பவாருக்காக அந்த இடத்தைக் விட்டுக்கொடுத்தார். பின்னர் மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, மாநில அமைச்சரவையில் விவசாயம் மற்றும் மின்சாரத் துறை அமைச்சராகப் பணியாற்றினார்.
அஜித் பவார் மகாராஷ்டிராவின் துணை முதல்வராக பலமுறை பதவி வகித்துள்ளார். தற்போது 6வது முறையாக அந்தப் பதவியை அவர் வகித்து வந்தார். பல்வேறு முதல்வர்களின் கீழ் துணை முதல்வராகப் பணியாற்றிய பெருமைக்குரியவர்.
பிருத்விராஜ் சவான் அமைச்சரவையில் 2 முறை துணை முதல்வராக இருந்துள்ளார். உத்தவ் தாக்கரே ஆட்சியில் ஒருமுறை துணை முதல்வராக இருந்துள்ளார். ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பாஜக-சிவசேனா கூட்டணியில் ஒருமுறை துணை முதல்வராக இருந்தார்.
தற்போதைய முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸுடன் இணைந்து ஒருமுறை 80 மணிநேரம் துணை முதல்வராக இருந்துள்ளார். தற்போதும் அவர் தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சியில் துணை முதல்வராக இருந்து வந்தார்.
சிறந்த நிர்வாகத் திறமை கொண்டவராக அஜீத் பவாரை நாம் அடையாளம் காணலாம். அந்த அளவுக்கு நிர்வாகத் திறமை படைத்தவர். அதேசமயம் கண்டிப்பானவரும் கூட. அரசுத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் வேகம் காட்டுவார். இதற்காக அதிகாரிகளிடம் கண்டிப்பு காட்டவும் தயங்க மாட்டார்.
தனது தொகுதியான பாராமதியை மகாராஷ்டிராவின் முன்மாதிரித் தொகுதியாக மாற்றியதில் இவருக்குப் பெரும் பங்கு உண்டு. மகாராஷ்டிராவின் கூட்டுறவுச் சர்க்கரை ஆலைகள் மற்றும் வங்கித் துறையில் பெரும் செல்வாக்கு கொண்டவர்.
2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம், தனது சித்தப்பா சரத் பவாருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெரும்பான்மையான எம்எல்ஏக்களுடன் பிரிந்து சென்று பாஜக கூட்டணியில் இணைந்தார். இந்திய தேர்தல் ஆணையம் இவரது தலைமையிலான அணியையே நிஜமான தேசியவாத காங்கிரஸ் கட்சி என அங்கீகரித்து கடிகாரம் சின்னத்தை வழங்கியது குறிப்பிடத்தக்கது.