Tamil Nadu new DGP: தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக.. மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!
May 29, 2026,05:08 PM IST
சென்னை: மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி மகேஷ் குமார் அகர்வால், தமிழ்நாடு காவல்துறையின் புதிய தலைமை இயக்குநராக (DGP) மற்றும் காவல் படைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது டெல்லியில் எல்லைப் பாதுகாப்புப் படையின் டி.ஜி.பி-யாகப் பணியாற்றி வரும் 1994-ஆம் ஆண்டு பேட்ச் ஐ.பி.எஸ் அதிகாரியான இவர், விரைவில் தமிழ்நாட்டின் காவல் துறை தலைமை அதிகாரியாகப் பொறுப்பேற்க உள்ளார்.
பஞ்சாப் மாநிலம், பதிண்டா என்ற ஊரைச் சேர்ந்தவர் மகேஷ் குமார் அகர்வால். ரோஹ்தக்கில் உள்ள மகரிஷி தயானந்தா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றவர். சட்டப் படிப்பை முடித்த கையோடு, தனது 22-வது வயதிலேயே முதல் முயற்சியிலேயே சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்று 1994-ஆம் ஆண்டு தமிழ்நாடு பிரிவு ஐ.பி.எஸ் அதிகாரியானார்.
தமிழ்நாடு கேடரைச் சேர்ந்த இவர், கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலான தனது காவல் பணியில் சட்டம்-ஒழுங்கு, போக்குவரத்து, புலனாய்வு என பல்வேறு பிரிவுகளில் முத்திரை பதித்துள்ளார்.
தொடக்க காலத்தில் தேனி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றினார். தேனி மாவட்ட எஸ்பியாக இருந்தபோது சட்டம்-ஒழுங்கை சிறப்பாகப் பராமரித்ததற்காக 'சிறந்த அமலாக்கத்திற்கான' விருதைப் பெற்றார்.
டெல்லி மற்றும் சண்டிகர் ஆகிய இடங்களில் சுமார் 7 ஆண்டுகள் சிபிஐ அதிகாரியாகப் பணியாற்றினார். இவரது தலைமையில் சண்டிகர் சிபிஐ ஊழல் தடுப்புப் பிரிவு மிகச் சிறந்த கிளையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. தமிழகத்திற்குத் திரும்பிய பின், சிபி-சிஐடி பிரிவில் ஐ.ஜி-யாகப் பொறுப்பேற்றார். சென்னை டி.சி.எஸ் பெண் ஊழியர் கொலை வழக்கு போன்ற பல பரபரப்பான மற்றும் சவாலான வழக்குகளைத் திறம்படக் கையாண்டு மிகக் குறுகிய காலத்தில் குற்றவாளிகளைக் கண்டறிந்தார்.
மதுரை, சென்னை ஆகிய இரு முக்கிய மாநகரங்களின் காவல் ஆணையராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சென்னை தெற்கு போக்குவரத்துத் துறை துணை ஆணையராக இருந்தபோது, விபத்துகளின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்துக் காட்டினார்.
தமிழக காவல் துறையின் ஆயுதப்படை சிறப்பு டி.ஜி.பி-யாக இருந்த இவர், அண்மையில் மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்டு, டெல்லியில் எல்லைப் பாதுகாப்புப் படையின் கூடுதல் தலைமை இயக்குநராகப் பொறுப்பு வகித்து வந்தார்.
காவல் துறையினரின் நலனுக்காகக் காவல் நிலையங்களில் குழந்தைகளுக்கான காப்பகங்களை மேம்படுத்துவது, காவலர்களின் பிறந்தநாள் மற்றும் திருமண நாட்களுக்கு விடுப்பு வழங்குவது போன்ற மக்கள்/காவலர் நலன் சார்ந்த திட்டங்களை முன்னெடுத்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.