ஆன்மீகத்தின் தொடக்கம் எது?

Maitreyi Niranjana
Aug 12, 2025,10:17 AM IST

- மைத்ரேயி நிரஞ்சனா


ஆன்மீகத்தின் தொடக்கம் எது? நீங்கள் யோசித்து இருக்கிறீர்களா?


புத்தரிடம் ஒருவர் ஆன்மீக தீட்சை வாங்க சென்ற போது புத்தர் அவரிடம் முதலில் சொன்னது நீங்கள் இந்த ஊரின் மயானத்திற்கு சென்று இருக்கிறீர்களா. ஒரு மயானத்தில் மூன்று நாட்கள் என்ன நடக்கிறது என்று பார்த்துவிட்டு பிறகு வாருங்கள் என்று சொன்னாராம்..


மரணத்தை பற்றி பயம் விட்ட பிறகு தான் ஆன்மிகம் ஆரம்பிக்கிறது..




பிறப்பு ஒரு நல்ல விஷயம் என்றும் மரணம் என்பது கெட்ட விஷயம் என்றும் நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது..  ஆனால் இறப்பு இல்லாமல் பிறப்பு இருக்க வாய்ப்பே இல்லை இதைப் புரிந்து இருக்கிறீர்களா.

 

நம் மனிதனாய் பிறந்து விட்டோம் என்றாலே அதுவே ஒரு மதிப்புக்குரிய விஷயம்.. இயற்கை ஒரு பதவி உயர்வு கொடுத்து விட்டது இல்லையா?

 

ஆன்மீகம் என்பது மதம் சார்ந்தது கிடையாது. எல்லாருக்கும் பொதுவானது.. ஏனெனில் இந்து மதம் கிறிஸ்தவ மதம் இஸ்லாமிய மதம் எல்லாமே நம்பிக்கை சார்ந்த விஷயங்கள்.. ஆன்மீகம் என்பது உண்மையைப் பற்றியது.. அந்த உண்மை மனிதராய் பிறந்த அனைவரும் அறிவதற்குரிய சாத்தியமும் அறிவும் உண்டு 


என்னை பாதித்த ஒரு சிறிய கதையை பார்க்கலாம் 


அவர் பெயர் காஷ்முஷ்.. அவர் ஒரு வியாபாரியாக இருப்பதனால் கடல் கடந்து சென்று வணிகம் செய்வது உண்டு. அவருக்கும் அவர் மனைவிக்கும் அவர்களுடைய அன்பு மகளின் மீது மிகவும் அன்பு உண்டு.. அப்படி ஒரு ஒருமுறை கடல் கடந்து வணிகத்திற்கு சென்ற போது.. ஊரில் ஒரு கொள்ளை நோய் தாக்கி அந்த சிறுமி இறந்து விடுகிறாள்..


அந்த காலம்.. தொலைத்தொடர்பு சாதனங்கள் எதுவும் இல்லாத சமயம். அவர் மனைவி இதைப்பற்றி அவர் கணவரிடம் சொல்ல முடியாத நிலைமை. ஆறு மாதம் கழித்து வீட்டுக்கு திரும்புகிறார். அவர் மனைவியிடம் எங்கே நம் குழந்தை என்று கேட்கிறார்.. அவர் மனைவியும் நீங்கள் சாப்பிட வாருங்கள் விளையாட சென்றிருக்கிறாள் என்று சொல்கிறார்..


அவர் மனைவி வருத்தத்துடன் இருப்பதை பார்த்து காஷ்முஷ் .. என்ன காரணம் என்று கேட்க…அவர் மனைவி சொல்கிறார்..

இல்லைங்க பக்கத்து வீட்ல இருக்கும் அக்கா.. புனித பயணம் போகும்போது என்னிடம் அவருடைய வைர அட்டிகையை கொடுத்து சென்றார்.. அது எனக்கு ரொம்ப பிடித்து விட்டது.. நான் அப்பப்போ எடுத்து போட்டுப்பேன்..  நாளைக்கு அவர் திரும்ப வந்துவிடுவார் நான் வைர அட்டிகையை திருப்பிக் கொடுக்க வேண்டும்.. அதனால எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது என்று சொல்கிறார். 

கணவரோ .. அது உனக்கு சொந்தம் இல்லாதது.. இருக்கும் வரை சந்தோஷப்பட்டாய் இல்லையா.. இப்போது கொடுக்கும் நேரம் வந்துவிட்டது. அதுக்கு ஏன் கவலைப்படுகிறாய் என்கிறார்..


இப்போது அவர் மனைவி சொல்கிறார்.. உங்களாலும் அதுபோல எடுத்துக் கொள்ள முடியுமா?.. நம் மகள் இப்போது இல்லை.. யார் கொடுத்தார்களோ அவர்களிடமே சென்று விட்டாள்.. இருக்கும் வரை நன்றாக பார்த்துக் கொண்டோம், சந்தோஷப்பட்டோம் இல்லையா?  இப்போது அவள் படைப்பவரிடம் சந்தோஷமாக இருக்கிறாள் என்பதாக கதை முடிகிறது..


பிறப்பு எப்படி இயற்கையின் விதியோ.. இறப்பும் இயற்கை விதி தான்.. இதில் மாற்றமே கிடையாது.. பிறப்பில்லாமல் இறப்பும் இல்லை இறப்பு இல்லாமல் பிறப்பும் இல்லை.. இயற்கையின் நியதி.. எல்லா பயத்திற்கும் காரணம் மரண பயம் தான் என்று சொல்வார்கள்.. இதில் உண்மை இருக்கிறதா இல்லையா என்பதை நாம் நிஜமாகவே யோசித்தோம் என்றால் அறிந்து கொள்ள முடியும்..


உயிர் பயம் என்பது எல்லா உயிர்களுக்கும் உள்ளது.. ஆனால் மனிதன் மட்டும் எவ்வளவு விஷயங்களுக்கு தேவையில்லாமல் பயம் கொள்கிறோம் கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம்.. நம் இமேஜ் என்ன ஆகும், நம்ம பணம் என்ன ஆகும், நம் உறவுகள் என்ன ஆகும் இப்படி எவ்வளவு விஷயத்திற்கு தேவையில்லாமல் பயம் கொள்கிறோம். இந்த பயம் தேவையா? 


பயம் அற்ற மனிதன் மரணத்தை வென்றவன்.. ஆன்மீகம் என்பது அவனுக்கே சாத்தியம்.


நாம் தொடர்வோம்……!


மைத்ரேயி நிரஞ்சனா.. எழுத்தாளர், பேச்சாளர், பாடகி என பன்முகத் திறமையாளராக வலம் வருகிறார். இல்லத்தரசி என்ற நிலையிலும் சிறந்து விளங்குபவர். மதுரையில் பிறந்தவர், சேலத்தில் வசிப்பவர். அடிப்படையில் ஒரு பொறியாளர். கடந்த 15 வருடமாக ஆன்மீகம் மற்றும் தியானத்தில் அதிக ஈடுபாடு. ஒரே மனித குலம் அமைய வேண்டும் என்ற கனவுடன் வலம் வருபவர்.  ஆன்மிகம் மட்டுமே மனிதகுலத்தை பயமற்ற, போட்டியில்லாத புதிய உலகிற்கு அழைத்துச் செல்லும், அங்கு பணம் மற்றும் போட்டிக்குப் பதிலாக அன்பு மட்டுமே அடிப்படையாக இருக்கும். பொறுப்புடன் கூடிய சுதந்திரமே புதிய மதமாக இருக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவர்.