சபரிமலை மகரஜோதி தரிசனம் 2026...சாமியே சரணம் ஐயப்பா...சரண கோஷம் விண்ணை பிளக்க பக்தர்கள் பரவசம்
பத்தனம்திட்டா : சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று பக்தர்களின் சரண கோஷம் முழங்க மகரஜோதி தரிசனம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டு மண்டல-மகரவிளக்கு பூஜைக்காக நவம்பர் 16ம் தேதியன்று கோவில் நடைதிறக்கப்பட்டது. பக்தர்களின் 41 நாட்கள் தரிசனத்திற்கு பிறகு, நவம்பர் 27ம் தேதியன்று மண்டல பூஜை நடைபெற்றது. மண்டல பூஜைக்கு பிறகு அன்றைய தினம் இரவு ஹரிவராசனம் பாடப்பட்டு, நடை சாத்தப்பட்டது. மீண்டும் மகரவிளக்கு உற்சவத்திற்காக டிசம்பர் 30ம் தேதியன்று மாலை கோவில் நடைதிறக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் சாமி ஐயப்பனை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
ஐயப்ப சீசனின் உச்ச நிகழ்வான மகரஜோதி தரிசனம், மகரசங்கராந்தி தினமான இன்று (ஜனவரி 14) மாலை நடைபெற்றது. மகரவிளக்கு உற்சவத்தின் போது சாமி ஐயப்பனுக்கு அணிவிப்பதற்காக பந்தள அரண்மனையில் பாதுகாக்க வைக்கப்பட்டிருக்கும் தங்கம், வைர ஆபரணங்கள், வாள் உள்ளிட்டவை அடங்கிய திருவாபரணப் பெட்டி பந்த அரண்மனையில் இருந்து தலைசுமையாக ஊர்வலம் சபரிமலைக்கு எடுத்து வரப்பட்டது. கருடன் வானத்தில் வட்டமிட ஜனவரி 12ம் தேதி துவங்கிய திருவாபரணப் பெட்டி ஊர்வலம், இன்று மாலை 06.15 மணியளவில் சன்னிதானத்தை அடைந்தது.
திருவாபரணப்பெட்டியில் உள்ள ஆபரணங்கள் சாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு, சன்னிதானத்தில் தீபாராதனை நடத்தப்பட்ட சில நொடிகளில் பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனம் நடைபெற்றது. ஆண்டு முழுவதும் தவக்கோலத்தில் இருக்கும் சாமி ஐயப்பன், இந்த நாளில் ஜோதி வடிவமாக காட்சி தருவதாக ஐதீகம். ஜோதி வடிவமாக காட்சி தரும் ஐயப்பனை காண தேவர்களும் சபரிமலைக்கு வருவதாக ஐதீகம்.
ஜோதி வடிவமாக காட்சி தந்த சாமி ஐயப்பனை, சாமியே சரணம் ஐயப்பா என்ற சரணகோஷம் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனனர். தொடர்ந்து ஜனவரி 19ம் தேதி இரவு வரை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறந்திருக்கும். பக்தர்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். ஜனவரி 20ம் தேதியன்று காலை நடைபெறும் பூஜையில் பந்தள அரண்மனை பிரதிநிதிகள் முன்னிலையில் பூஜைகள் நடத்தப்பட்டு, சாமி ஐயப்பனின் திருமேனி திருநீரால் மூடப்பட்டு, கையில் ருத்ராட்ச மாலை, தண்டம் அளிக்கப்பட்டு, சன்னதியில் ஐயப்பன் முன்னிலையில் ஒரே ஒரு தீபம் மட்டும் ஏற்றப்பட்டு, நடை சாத்தப்படும். மீண்டும் மாசி மாத உற்சவத்திற்காக பிப்ரவரி 12ம் தேதி மாலை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படும்.