திமுக கூட்டணியில் கமல் கட்சிக்கு எத்தனை சீட்? வெளியான பரபரப்பு அப்டேட்
சென்னை : தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட திமுக கூட்டணியில் உள்ள கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு எத்தனை சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த முக்கிய தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
நடிகரும், எம்.பி.,யுமான கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் உடனான ஆலோசனை கூட்டம் இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிட உள்ள தொகுதிகள், தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது, வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே திமுக.,வுடன் தொகுதி பங்கீடு குறித்த முதல் கட்ட பேச்சுவார்த்தையை மக்கள் நீதி மய்யம் கட்சி நடத்தி முடித்துள்ளது.
திமுக தலைமை உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின் போது மக்கள் நீதி மய்யம் கட்சி இரட்டை இலக்க தொகுதிகளை கேட்டதாகவும், மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் தொகுதிகள் குறித்த உத்தேச பட்டியலை அளித்ததாகவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையில் திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இரண்டு தொகுதிகளை ஒதுக்க திமுக தலைமை முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
திமுக தலைமை ஒதுக்கிய 2 சீட்களை மட்டும் மக்கள் நீதி மய்யம் பெற்றுக் கொள்ளுமா அல்லது கூடுதல் தொகுதிகளை ஒதுக்கச் சொல்லி கேட்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஒருவேளை திமுக தலைமை ஒதுக்கிய 2 சீட்களை மட்டும் பெறுவதற்கு மக்கள் நீதி மய்யம் சம்மதம் தெரிவித்தால், எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட கேட்டு பெறுவார்கள், அந்த இரண்ட தொகுதிகளில் போட்டியிட போகும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் யார் என்பதையும் தெரிந்த கொள்ள அக்கட்சியின் தொண்டர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.
தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தை ஏற்கனவே தேர்தல் கமிஷன் ஒதுக்கி விட்டது. இந்நிலையில் சென்னையில் ஒரு தொகுதியையும், தென் மாவட்டங்களில் ஒரு தொகுதியையும் மக்கள் நீதி மய்யம் கேட்டு பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக சொல்லப்படுகிறது.