நம் மகளின் புன்னகையில் நல்வாழ்வு மலரட்டும்!

Su.tha Arivalagan
Oct 11, 2026,05:13 PM IST

- சிவ.ஆ.மலர்விழி ராஜா சீர்காழி


மழலைமொழி பேசியவள்மதி ஒளியாய் நிறைந்திடுவாள்....  

மங்காத விளக்காக மண்ணில் புகழ் சேர்த்திடுவாள்  !


கல்வியெனும் காவியத்தால் கலைமகளாய் சிறந்திடுவாள்....

சின்னஞ்சிறு அடியெடுத்து சிகரங்களை தொட்டிடுவாள்  !


சிந்தனையின் ஆழத்திலே சரித்திரங்கள் படைத்திடுவாள்  .....

கண்ணிமைக்கும் நேரத்திலே கனவுலகம் வென்றிடுவாள்  !


கண்ணியத்தை காத்திடவே கடமைகளை செய்திடுவாள்......

அநீதியென்னும் தடையகற்றி அறநெறியில் வாழ்ந்திடுவாள்  !




விவசாயம் செழித்திடவே விஞ்ஞானம் வளர்த்திடுவாள்.....

விண்வெளியின் சாதனையில் விண்மீனாய் ஒளிர்ந்திடுவாள்   !


மருத்துவம் பயின்றுஅவள் மக்களுக்கு பயனளிப்பாள்......

நீதிநெறி நிலைத்திடவே நெஞ்சமெல்லாம் வளர்ந்திடுவாள்  !


தாலாட்டுப் பாடலிலே தமிழினின்பம் பொங்கட்டும்....

தாய் மடியின் அன்பினிலே தன்னம்பிக்கை தங்கட்டும்  !


நாளையென்னும் பாதையிலே நம்பிக்கையும் ஒளிரட்டும்....

நம்மகளின் புன்னகையில் நல்வாழ்வு மலரட்டும்....!


பெண்ணின் கனவை மதித்திடவே புதுமை பல பிறந்துவிடும்.....

பெண்ணை மதிக்கும் மண்ணில் தான் பெருமைகளும் தேடி வரும்....!


சர்வதேச பெண் குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்


(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர்)