"தில்லை மூதூர் ஆடிய திருவடி"!

Su.tha Arivalagan
Oct 29, 2026,11:19 AM IST

- சிவ.ப.மாலதி ராஜாராம்


விநாயகர் துதி


ஜந்து கரத்தனை யானை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக்கொழுந்தினைப் புந்தியில் வைத்து அடிப் போற்றுகின்றேனே


திருவாசகம் தொடர்ச்சி


பதிகம் -2


கீர்த்தி திருஅகவல்


பதிக சிறப்புக்கள்


திருத் தில்லை என்னும் இன்றைய சிதம்பரம் என்ற தலத்தில் அருளப்பட்ட மிகச் சிறப்பு வாய்ந்த பதிகமாகும் நிலைமண்டல ஆசிரியப்பா,  




சிவனது அருள் செயல்கள், மற்றும் அடியாரை எவ்வாறு ஆட்கொண்டார் என்றும் திருநீற்றுக் கோடுகள் கொண்ட கொடி, எல்லையில்லா ஆனந்தம்ஆறு, பெரும் சத்தத்துடன் கூடிய நாதமே முரசு, மூன்று கூர்மையான சூலமே படை, கொன்றை மலரே மாலை, காளையை ஊர்தியாகவும், பாண்டிய நாடே நாடாகவும், உத்தரகோசமங்கை ஊராகவும், ஆதிமூர்த்திகளுக்கு அருள் புரிந்த தேவாதி  தேவன் பெயர் எனவும், அருளே மலை என்று, இவ்வாறு கொடி, ஆறு, முரசு, மாலை, ஊர்தி, படை,நாடு, பேர், ஊர்,  மலை என்று சிவனது 10 வித சிறப்புகள் அடியார்கள் உடன் தானும் உடன் செல்லவில்லையே என்ற பிரிவின் வருத்தம், புலியூர் என்னும் தில்லையின் சிறப்புகள் என்று இப்பதிகத்தில் குறிப்பிட்டு பாடியுள்ளார்,


"தில்லை மூதூர் ஆடிய திருவடி" என்று தொடங்கி,  "பொலி தரு புலியூர்ப்புக்கு, இனிது அருளினன், ஒலிதரு கைலை உயர் கிழவோனே" என்று முடியும் இப்பாடல் ஆனது 146 அடிகளைக் கொண்டு தில்லையில் அருளப்பட்டது,


படைத்தல், காத்தல், நீக்கல், மறைத்தல், அருளல்,என்று ஐந்து தொழில்களை  நிகழ்த்தும் கூத்த பெருமாளின் ஆடலே எல்லாவற்றையும் இயங்க செய்கிறது, சிவன் ஆன்மாக்களின் ஈடேற்றம் கருதி தலங்கள் தோறும் எழுந்து  அருளி அருட் செயல்களை செய்து அடியாரை ஆட்கொள்கிறான். இதனை முதல் 99 வரிகளும், அண்ணலாகிய பெருமான் அரசச்  சின்னங்களுடன் தோன்றி அடியார்களை ஆட்கொண்டான்.


அதனை126 வது அடிவரையும், ஆன்மாக்களின் பிறப்பையும் நிலையும் கண்டு அதனால் எவ்வாறு ஆண்டு கொண்டான் இறைவன் என்ற அற்புதங்கள், மற்றும் தில்லையின் சிறப்பு 129 அடி வரை கூறப்படுகிறது. அதன் பின் பெருமானுடன் சென்ற அடியார் நிலையும், செல்ல இயலாத அடியார்களின் ஏக்கமும் 139 அடி வரை வருகின்றன. முடிவில் இறைவன் "புலியூர் புக்கு" இனிது அருளிய எழில் வருணிக்கப்படுகிறது,பெரும்பாலும் இறைவன் நிகழ்த்திய விந்தை அருள் செயல்கள் இத்திருப்பதிகத்தில் வருகின்றன.


தில்லை எனும் சிதம்பரத்தை மையமாக வைத்து கைலையை உரிமையாக கொண்டு " என்னாட்டவர்க்கும் இறைவனாக" திருஅருளை உணர்த்துகிறது. கீர்த்தி திரு அகவலில் சிவபெருமான் திருவிளையாடல் புரிந்து அருள் ஆசி வழங்கியது மற்றும் முப்பதுக்கும் மேற்பட்ட  திருத்தலங்கள் இப்பாடலில் இடம் பெற்றுள்ளன. அவை முறையே பின் வருமாறு அமைந்துள்ளது சிறப்பாகும்.


தில்லை, மகேந்திர மலை, கல்லாடம், பஞ்சப்பள்ளி, நந்தம்பாடி, குடநாடு,வேலம் புத்தூர் (சாந்தம் புத்தூர்),, மதுரை( பிட்டுக்கு மண் சுமந்து நரியை குதிரை ஆக்கி திருவிளையாடல் நிகழ்த்திய தலம்), உத்தரகோசமங்கை, வாதவூர் (மாணிக்கவாசகர் அவதாரத்தலம்) திருப்பெருந்துறை (குருந்த மரத்தடியில் குரு உபதேசம் பெற்ற  ஊர்), பூவலம், திருவெண்காடு, பட்டமங்கை, ஓரீயூர், பாண்டூர், தேவூர், திருவாரூர், திருவிடைமருதூர், திரு ஏகம்பம்(காஞ்சிபுரம்), திருவாஞ்சியம், திருவாவடுதுறை, திருக்கடம்பூர், திருஈங்கோய்மலை, திருவையாறு, திருத்துருத்தி, ( பூம்புகார்), திருப்பனையூர், கழுமலம் (சீர்காழி), திருக்கழுகுன்றம், திரு புறம்பயம், திருக்குற்றாலம், சந்திரதீபம்.


இவை ஊர்கள் ஆகவும் நாடுகளில் பாண்டியநாடு, சோழ நாடு என்று இப்பதிகத்தில் குறிப்பிட்டு சிறப்பித்துள்ளார். பதிகத்தின் பொருளை அடுத்து  காண்போம்.


(தொடரும்)


(மாலதி ராஜாராம், உழவாரப்பணி மற்றும் தேவாரம் திருவாசகம் முற்றோதுதல் செய்தல் தையல் மற்றும் கைவினைப் பொருட்கள் செய்தல் பொழுதுபோக்கு ஆகும். இல்லத்தரசி)