Afternoon Cooking Tips: திருவாட்சி இலை சட்னி!

Su.tha Arivalagan
Oct 29, 2026,02:59 PM IST
- மாலதி ராஜாராம்

இருவாச்சி, திருவாச்சி என்று குறிப்பிடுவர். இந்த கீரை அல்லது இலை இரும்பு சத்து அதிகம் கொண்டது. மேலும்  மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலி, வாந்தி போன்ற பிரச்சனைகளுக்கு அருமருந்து இந்த கீரை. இதனை கூட்டு, பொரியல், துவையல், இட்லி தோசைக்கு உகந்த பொடி, இவ்வாறு பலவிதமாக செய்து உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

இப்பொழுது திருவாச்சி இலை வைத்து சட்டினி செய்யும் முறை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

துவரம் பருப்பு_ 25 கிராம்
கடலைப்பருப்பு 10 கிராம் 
வர மிளகாய் 3
புளி சிறிதளவு கொட்டைப்பாக்கு அளவு அல்லது அவரவர் சுவைக்கு ஏற்ப கூடுதலாகவோ குறைவாகவோ வைத்துக் கொள்ளலாம் (ஏனென்றால் பெரும்பாலும் இது போன்ற பச்சிலை சமையலுக்கு புளி குறைவாக சேர்த்துக் கொள்வது மிகவும் நன்று ) 
கருவேப்பிலை சிறிதளவு
பெருங்காயத்தூள் ஒரு பின்ச்
தேங்காய் அரைமூடியில் பாதி 
உப்பு தேவைக்கு ஏற்ப 

செய்முறை 





ஒரு வானலியில் தேங்காய் எண்ணெய், தேங்காய் துருவல்சிறிதளவு சேர்த்து வர மிளகாய் வறுத்துக் கொள்ளவும். 

துவரம் பருப்பு கடலை பருப்பு இரண்டையும் சேர்த்து வாசனை வரும் அளவு பொன்நிறம் வருவதற்கு முன்பே திருவாச்சி இலை புளி, உப்பு  கருவேப்பிலை இவை அனைத்தும் கலந்து நன்றாக வறுத்து ஆற வைத்து அதனை மிக்ஸி ஜாரில் மிகவும் நைசாக அரைக்காமல் லேசா கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

தேங்காய் எண்ணெய் சேர்த்து கடுகு உளுத்தம் பருப்பு பெருங்காயத்தூள் ஒரு வரமிளகாய் இரண்டு மூன்றாக கிள்ளியது சேர்த்து தாளிப்பு கொடுத்து சட்டினியில் கலந்து கொள்ளவும்.

தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். இட்லி, தோசைக்கு மிகவும் அருமையாக இருக்கும். சட்னி செய்து சாப்பிட்டு பாருங்கள்.  சுவையை ரசித்து அனுபவியுங்கள்.

குறிப்பு

அதிகமாக இலை கிடைத்தால் அதனை நிழலில் உலர்த்தி பத்திரப்படுத்திக் கொள்ளலாம். தேவையான பொழுது இட்லி பொடியாகவோ அல்லது இது போன்ற சட்னிக்கோ அரைத்துக் கொள்ளலாம். மிகவும் அருமையாக இருக்கும். 

இதுபோலவே முருங்கை கீரை, கருவேப்பிலை, கொத்தமல்லி, இலை,புதினா இலை, வல்லாரை இவைகளையும் நிழலில் உலர்த்தி எடுத்து வைத்துக்கொண்டால் சட்டினி பொடி வகைகள் செய்யலாம்.

பொடி வகைகள் செய்யும் பொழுது சிறிது தனியா, மிளகு, எள், கட்டி பெருங்காயம், பூண்டு, இவைகளை சேர்த்து செய்தால் சுவை கூடுதலாக இருக்கும்.

(மாலதி ராஜாராம், உழவாரப்பணி மற்றும் தேவாரம் திருவாசகம் முற்றோதுதல் செய்தல் தையல் மற்றும் கைவினைப் பொருட்கள் செய்தல் பொழுதுபோக்கு ஆகும். இல்லத்தரசி)