மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்.. சிறந்த காமெடியன்.. கதாசிரியர்!

Su.tha Arivalagan
Dec 20, 2025,01:29 PM IST

கொச்சி: மலையாள சினிமாவின் மூத்த நடிகர், புகழ்பெற்ற திரைக்கதை ஆசிரியர் மற்றும் இயக்குநர் சீனிவாசன், உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 69. அவரது மகன் வினீத் சீனிவாசனும் நடிகராக, பாடகராக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


நீண்ட நாட்களாக உடல்நலப் பாதிப்புகளால் சிகிச்சை பெற்று வந்த சீனிவாசன், கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை காலமானார். அவரது மறைவு மலையாளத் திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




40 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் இயங்கி வந்த ஸ்ரீனிவாசன், 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மலையாள சினிமாவின் பொற்காலமாகக் கருதப்படும் 1980 மற்றும் 90-களில் பல வெற்றிப் படங்களுக்குத் திரைக்கதை எழுதியவர். சமூக அவலங்களை நையாண்டியுடனும், நகைச்சுவையுடனும் சொல்லும் பாணியில் அவர் வல்லவர். சிறந்த நகைச்சுவை நடிகரும் கூட. 


மோகன்லால், மம்முட்டியுடன் இணைந்து பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். நாடோடிக்காற்று, சந்தேசம், மழையெத்தும் முன்பே, உதயனாணு தாரம் போன்ற பல காவியத் திரைப்படங்களை இவர் தந்துள்ளார்.


அவருக்கு விமலா என்ற மனைவியும், வினித் ஸ்ரீனிவாசன் மற்றும் தியான் ஸ்ரீனிவாசன் என இரு மகன்களும் உள்ளனர். அவர்கள் இருவரும் மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகர்களாகவும் இயக்குநர்களாகவும் ஜொலித்து வருகின்றனர்.


மலையாளத் திரையுலகில் ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளதாகக் கூறி பல திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.