கால் வைக்கிற இடமெல்லாம் கன்னிவெடியா இருக்கே...மலேசியாவில் அரசியல் பேச விஜய்க்கு தடை!
கோலாலம்பூர் : நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற உள்ள நிலையில், அந்த நாட்டு அரசு விஜய்க்கு பல்வேறு அதிரடி நிபந்தனைகளை விதித்துள்ளது.
நடிகர் விஜய் மற்றும் அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் டிசம்பர் 27ம் தேதி நடைபெறவுள்ளது. நடிகர் விஜய் தனது 'தமிழக வெற்றி கழகம்' (TVK) கட்சியின் முதல் மாநாட்டைத் தொடர்ந்து, திரையில் தோன்றும் கடைசிப் படமாக 'ஜனநாயகன்' இருக்கலாம் எனக் கருதப்படுவதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்தச் சூழலில், வெளிநாட்டில் நடக்கும் இந்த விழாவிற்குப் பிறப்பிக்கப்பட்டுள்ள அரசியல் தடை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலேசியாவில் ஏன் விஜய்க்கு இப்படி ஒரு கிடுக்கிப்பிடி தடை.. இதன் பின்னணியில் யாரேனும் உள்ளனரா, மலேசிய அரசுக்கு அவர்கள் தவறான தகவலைக் கொடுத்து தடை செய்யச் சொல்லியுள்ளார்களா என்ற கேள்வியை பலரும் எழுப்பியுள்ளனர்.
மலேசிய அரசின் முக்கிய நிபந்தனைகள்:
1. 'ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா என்பது முழுக்க முழுக்க சினிமா சார்ந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மட்டுமே இருக்க வேண்டும்; மேடையில் யாரும் அரசியல் பேசக்கூடாது.
2. விழாவிற்கு வரும் ரசிகர்கள் தங்களின் அரசியல் கட்சி கொடி, டி-ஷர்ட் அல்லது துண்டு அணிந்து வரக் கூடாது.
3. இந்த நிபந்தனைகளை யாராவது மீறினால், அவர்கள் மீது மலேசிய சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
நடிகர் விஜய் 'தமிழக வெற்றி கழகம்' (TVK) என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் நிலையில், அவரது திரைப்பட விழாவில் அரசியல் முழக்கங்கள் எழலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இதைக் கட்டுப்படுத்தும் விதமாகவே, மலேசிய அரசு இத்தகைய கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
விஜய்யின் மாநாடு, பிரச்சார கூட்டங்கள் ஆகியவற்றில் பெரிய அளவில் கூட்டம் சேர்ந்து வருவது வழக்கமான ஒன்றாகி விட்டது. ஆரம்ப முதலே விஜய்யின் பிரச்சாரங்களுக்கு தமிழக போலீசார் ஏராளமான கடுமையான நிபந்தனைகளை விதித்து வருகின்றனர். இதற்கிடையில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு இந்த கட்டுப்பாடுகள் இன்னும் கடமையாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் புதுச்சேரி மற்றும் ஈரோட்டில் நடைபெற்ற விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு மிக அதிக அளவிலான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.
தமிழகத்தில் தான் இவ்வளவு கட்டுப்பாடுகள் விதிக்கிறார்கள் என்று மலேசியாவில் பிரம்மாண்டமாக இசை வெளியீட்டு விழாவை நடத்தி, அங்காவது விஜய் அதிரடியாக பேசுவார் என்றால் தமிழகத்தையே மிஞ்சும் அளவிற்கு மலேசியாவில் அரசியல் பேசவே விஜய்க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மலேசிய அரசின் இந்த கட்டுப்பாடுகள் விஜய் ரசிகர்களையும், தவெக தொண்டர்களையும் கடுமையான அதிர்ச்சிக்கும் ஏமாற்றத்திற்கும் உள்ளாக்கி உள்ளது.
அதேசமயம், அரசியல், சினிமா ஆகியவற்றை தனித் தனியாக பார்ப்பதில் விஜய் தெளிவாகவே உள்ளார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.