கொள்ளை கொள்ளையாய் நல்ல பயன்கள் நல்கும் தாயே!
- கவிஞர் மல்லிகா செல்வராஜ்
வெள்ளை உள்ளத்திற்கு
எடுத்துக்காட்டாக உள்ள காயே!
கொள்ளை கொள்ளையாய்
நல்ல பயன்கள் நல்கும் தாயே!
படார் படார் என்று
யதார்த்தமான உண்மைகளைப்
பேசுபவர்களைப் பார்த்து
"தேங்காய் உடைத்த மாதிரி"
பேசுவார்கள் என்பர்!!
எந்த விஷயங்களிலும்
உன் பங்களிப்பு இல்லாமல் நடைபெறாதே!?
வீட்டு பூஜை!
ஆலய வழிபாடு!
காரிய சித்தி!
பிராத்தனை நிறைவேற!
திருஷ்டி கழிய!
சமையல், பலகாரம்,
இனிப்பு பண்டங்கள்... என
எங்கு நோக்கினும் உன் வடிவே!!
மிக உயர்ந்த தென்னை
மரத்தில் பிறந்தாய்...!
மக்கள் மனதிலும்
மிக உயர்ந்த இடத்தைப் பிடித்தாய்...!
பால் ஆனாய்!!
உன்னை சுற்றி உள்ள
நாரால் கயிறு ஆனாய்!
உன் ஓட்டினால்
கலை பொருட்கள்
பல பிறந்தது!!
உணவை பரிமாற
அகப்பை வந்தது!!
உன் பிறந்த வீட்டின் பெருமைதான்
எத்தனை!! எத்தனை!!
எங்களுக்கு வரமாய்
வந்த தேன் காயே!!
(கவிஞர் மல்லிகா செல்வராஜ், தித்திக்கும் சத்தான கடலை மிட்டாய்க்குப் பெயர் போன கோவில்பட்டியில் வசிக்கும் பல்கலை வித்தகர், மல்லிகை மலர் போன்று வெள்ளை மனமும், மென்மை குணமும் கொண்ட மங்கை இவர்!! இயற்கையை நேசித்து, எழுத்துக்களை வாசித்து, நேசத்தை சுவாசித்து வாழும் நங்கை இவர்! இனிய இல்லத்தரசி! கவிதைகள் புனைவது, திரையிசைப் பாடலின் மெட்டிற்கு ஏற்ற சந்தங்கள் அமைத்து சொந்த வரிகளில் இசைபடிக்கும் வல்லமை பெற்றவர்!)