எனக்கு "ஊஞ்சல்" என்றால் ரொம்ப பிடிக்கும்.. உங்களுக்கு?
- சொ. மங்களேஸ்வரி
"ஊசல்" என்பது சங்க காலத்தில் இருந்தே பயன்பாட்டில் இருந்த ஒரு பொழுதுபோக்கு. இதற்கு தூலி, தூரி, ஜுலா ( மர ஊஞ்கல்கள்) என வேறு பெயர்களும் உள்ளன. ஊஞ்சல்கள் பொதுவாக, துணியினால் மரக்கிளைகளில் அல்லது வீட்டுக் கூரைச் சட்டத்தில் கட்டப்பட்ட காலம் மாறி, வீட்டின் பால்கனியில் மூங்கில் கூடை ஊஞ்சல், அதிக இட வசதி உள்ள வீடுகளின் மாடத்தில் பெரிய தேக்கு மர ஊஞ்சல், தோட்டங்களில் இரும்பினாலான ஊஞ்சல் எனவும் பார்க்க முடிகின்றது. மரத்தில் கயிறுகளைக் கட்டி உட்காரும் போது, அக்கயிறு அழுத்தாமல் இருக்க, துணியை மடித்துப் போட்டு உட்கார்ந்து ஆடுதல் அல்லது தென்னை மட்டையைத் தூண்டாக வெட்டி அதன் இரு நுனிகளிலும் லேசாகக் கீறி, அதைக் கயிற்றில் இருபுறமும் செருகி ஆடுவதும் மலையேறிப் போய்விட்டது.
தற்போதெல்லாம் கண்கவர் வண்ணங்களில் பிளாஸ்டிக் ஊஞ்சல்கள் மற்றும் மூங்கில் கூடை ஊஞ்சல்கள் கிடைக்கின்றன. குழந்தைகள் பூங்காக்களிலும் பிளாஸ்டிக், இரும்பு ஊஞ்சல்களைக் காண முடிகிறது. சரி நீங்கள் ஊஞ்சலாடி இருக்கிறீர்களா? என்னங்க இப்படி கேட்டுபுட்டீங்கன்னு நீங்க சொல்றது கேட்குது. ஆம் அனைவரும் பிறந்ததும் விளையாடிய விளையாட்டு இதுவாகத்தானே இருக்க முடியும். அன்னை தன் சேலைத் துணியில் தொட்டில் கட்டி, அவளின் வாசனையோடும் அல்லது அப்பாவின் வேஷ்டியில் கட்டி "தகப்பன் இருக்கிறான் உன்னைத் தாழாமல் காப்பாற்ற" என்ற நம்பிக்கையை ஊட்டியும், பருத்தி நூலின் கதகதப்பையும் தந்து, சிணுங்கல்கள் வரும்போது எல்லாம் ஆட்டித் தூங்க வைத்தாளே, அதுதானே நாம் கவலையறியாமல் ஆடிய முதல் ஊஞ்சல் விளையாட்டு.
சங்க இலக்கியங்களில் "ஊசல்" எனக் குறிப்பிட்டு 14ஆம் நூற்றாண்டிலே, நூற்றுக்கும் மேற்பட்ட ஊஞ்சல் இலக்கிய நூல்கள் இயற்றப்பட்டுள்ளன. ஏன் கோவில்களில் கூட இறைவனை ஊஞ்சலில் வைத்து, பக்திப் பாடல்கள் பாடி மகிழ்விக்கும் வழிபாடு "ஊஞ்சல் சேவை" எனச் சொல்கிறோமே. இது இறைவனின் மகிழ்ச்சிக்காகவும், பக்தர்களின் மன அமைதிக்காகவும், எதிர்மறை எண்ணங்கள் நீங்கி வாழ நடத்தப்படும் சிறப்பான கைங்கரியம் ஆகும்.
சுற்றுலாத் தளங்களில் கூட ஈர்ப்பை ஏற்படுத்தவும், சொகுசான ஓய்விற்கும் பல ரிசார்டுகளில், பெரும்பாலும் மணல் கடற்கரைகளில் இரு மரங்களுக்கு இடையே Hammock எனப்படும் துணிவலைத் தொங்கு ஊஞ்சல்கள் வைத்திருக்கிறார்கள். இது நீர் நிலைகளின் பரந்த ரம்யமான காட்சி உள்வாங்கலோடு, ஆக்ஸிஜன் நிரம்பிய தூய காற்றைச் சுவாசித்து, உள்ளப் புத்துணர்ச்சியைப் பெருக்கிக் கொள்வதற்கு பயன்படுகிறது அல்லவா ?
இந்து மத திருமணச் சடங்கு வைபவத்திலும் மணமக்கள் மகிழ்ச்சியாக வாழ ஊஞ்சல் சடங்கு நடத்தப்பட்டது . வீட்டு வரவேற்பறையில் ஊஞ்சல் கட்டி வைத்திருந்தால் வீட்டிற்குள் வரும் தேவதைகள் ஊஞ்சலில் ஆடப் பிரியப்படுவதாகவும், ஆடி மகிழ்ந்து நல்லது செய்வார்கள் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.
ஊஞ்சல் ஆடுவது ஒரு எளிய உடற்பயிற்சி மட்டுமல்லாது சிறந்த மனநலப் பொழுதுபோக்காகும்.
நன்மைகள்
ஊஞ்சலின் சீரான அசைவு மனதை அமைதிப்படுத்தி, எதிர்மறை எண்ணங்களை நீக்கி, நேர்மறையான மனநிலையை உருவாக்குகிறது. இது முதுகுத் தண்டுக்கு நல்ல பயிற்சியை அளிக்கிறது. தொடர்ந்து ஊஞ்சல் ஆடுவது இதயத்திற்கு ரத்த ஓட்டத்தை சீராக்கி, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, மனச்சோர்வை நீக்கி, உற்சாகம் தருகிறது. முதுகுத்தண்டுக்கு ரத்த ஓட்டம் படர்ந்து, மூளை சுறுசுறுப்பாகிறது.
உணவு உட்கொண்ட பிறகு மிதமான அசைவில் ஊஞ்சலாடுவது, செரிமானத்திற்கு உதவுகிறது. இது ஆழ்ந்த தூக்கத்தைப் பெறவும், மனச்சோர்வை நீக்கவும் உதவுகிறது. குழந்தைகளுக்கு உடல் இயக்கு திறனையும், தசை வளர்ச்சியையும் இது மேம்படுத்துகின்றது.
இன்று பல வீடுகளில் ஊஞ்சல்கள் பால்கனியில் தொங்கத்தான் செய்கின்றன. ஆனாலும் அதற்கெல்லாம் நேரம் எங்கிருக்கிறது என அலுத்துக் கொள்வோர் பெருகிவிட்டனரே! பரபரப்பான வாழ்க்கையில், பத்து நிமிடங்கள் நம் உடல் மற்றும் மன நலனைக் காக்க செலவிடுதல் தவறில்லையே. திருமணச் சடங்குகளில் பிற மாநில மற்றும் நாடுகளின் கலாச்சாரக் கலவையாக பல விஷயங்களைச் சேர்த்துக்கொண்டு, புகைப்படங்கள் எடுத்து நிறைத்துக் கொள்ளும் நாம், " ஊஞ்சல் சடங்கு" நிகழ்த்தியும் ஊஞ்சலைச் சீர்வரிசை பொருள்களில் ஒன்றாகச் சேர்த்தும், உறவுகளுடன் தினமும் 10 நிமிட அலைபேசி அழைப்பில் பேசும் நேரமாக்கி , ஊஞ்சலாடி, உடலையும் மனதையும் பேணுவோம்.
(சொ.மங்களேஸ்வரி, பட்டதாரி ஆசிரியை, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, கோவில்பட்டி, தூத்துக்குடி மாவட்டம்)