மூச்சடக்கும் கப்பல்.. அப்படீன்னா என்ன தெரியுமா!
- சொ. மங்களேஸ்வரி
சிறு பிள்ளையாக நீர் நிலைகளில் குளித்து விளையாடி மகிழ்ந்த போது மூக்கை கைவிரல்களால் பொத்திக்கொண்டு எவ்வளவு நேரம் நான் தண்ணீருக்குள் மூச்சடக்குகின்றேன் என எண்ணுகிறாயா? என்று விளையாண்ட நியாபகம் மனதை வருட, ஆழ்கடலில் மூச்சடைக்கி முத்துக் குளித்தல் எனும் தொழிலை, உயிரைப் பணயம் வைத்து செய்யும் மனிதர்களை அதிசயமாக நினைக்கும் நினைவோடும், மூச்சடக்கும் கப்பலைப் பற்றி ஒரு நினைவு கூறல் இது. கடல்வழிப் போக்குவரத்திற்காக பயன்படும் கொள்கலன்கள் மற்றும் வணிக ரீதியான பொருட்களை ஏற்றிச் செல்லும் பெரிய வாகனங்கள் கப்பல்கள் ஆகும்.
இவை பயணிகள் கப்பல், சரக்கு கப்பல், போர்க்கப்பல் என வகைப்படுத்தப்படுகின்றன. இந்த கப்பல்களின் முக்கிய பாகங்கள் ஏரா (அடிபாகம்) முகரி (முன்பாகம்) அணிய துரோதை ( பின் பாகம்) ஆகும். தளம், கூம்பு, நங்கூரம் மற்றும் வாரி நீக்கம் போன்றவை தமிழர்களின் பாரம்பரிய கப்பற்கலையில் முக்கிய பங்காக கருதப்படுகின்றது. கப்பல்கள் ஆழ் கடல் ஆய்வு மற்றும் வானிலை ஆராய்ச்சி போன்ற சிறப்புப் பணிகளுக்கும் பயன்படுகின்றன.
தற்போது கூடத் தலைப்புச் செய்தியாக கச்சா எண்ணெயுடன் குஜராத்தின் காண்ட்லா துறைமுகத்திற்கு இந்தியக் கப்பல் வந்துவிட்டது என்பது தானே. கடல் சார் பாதுகாப்பிற்காக நாம் கப்பற்படை வைத்திருக்கிறோம். அதில் போர்க்கப்பல்கள், நீர் மூழ்கிக் கப்பல்கள் மற்றும் விமானம் தாங்கி கப்பல்கள் என பல வகை கப்பல்கள் உள்ளன.
இதில் நீர் மூழ்கி கப்பல்கள் என்பது மனிதர்கள் மற்றும் ஆயுதங்களைத் தாங்கி நீருக்கடியில் மூழ்கிச் செல்லக்கூடிய ஒரு அதிநவீன நீர் ஊர்தி ஆகும். இவை பெரும்பாலும் போர் மற்றும் கடல் சார் ஆராய்ச்சிக்குப் பயன்படுகின்றன. டீசல் மற்றும் அணுசக்தி மூலம் இயங்கும் இவை நீண்ட நேரம் நீருக்கடியில் பயணம் செய்யும் திறன் கொண்டவை. நீர்மூழ்கிக் கப்பல்கள் பொதுவாக உருளை வடிவம் கொண்டது. இதன் மேல் பகுதியில் sail அல்லது fin எனப்படும் தகவல் தொடர்பு சாதனங்கள் இருக்கும். பைனாகுலர்களும் இருக்கும்.
பாலெஸ்ட் டேங்க் (Ballast tanks) எனப்படும் நீர் மற்றும் காற்றைக் கட்டுப்படுத்தும் அமைப்புகள் மூலம் நீரில் மூழ்குதல் மற்றும் மேலே வருதலை இக்கப்பல்கள் செய்கின்றன. இவை இராணுவத்தின் இன்றியமையா அங்கமாக ஆகின்றது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நீர்மூழ்கி கப்பல்கள் கடல் கன்னி வெடிகளைப் பகைவர் கப்பல் போக்குவரத்து அதிகமாக இருக்கும் இடங்களில் பதிப்பதில் பெரிதும் பயன்படுத்தப்பட்டன. மேலும் பல ரகசிய நடவடிக்கைகளிலும் ஒற்றர்களைக் கொண்டு செல்லும் பணியிலும் பயன்பட்டன.
தற்போதைய நீர் மூழ்கிக் கப்பல்களில் அறிவியல் முன்னேற்றங்கள் ஆன நீர்மூழ்கி எறிகணைகள், அணுக்கருத்திறன் பெற்ற ஏவுகணைகள் மற்றும் நீர் மூழ்கி வழிகாட்டப்பட்ட ஏவுகணைகள் இன்றியமையாத அங்கமானதால், நீர்நிலைகளில் உள்ள இலக்குகளை மட்டுமல்லாது, தொலைதூர நிலை இலக்குகளைத் தாக்கி அழிக்க வல்லவை. இக்கப்பல்களில் முக்கிய பலமாக கருதப்படுவது யாதெனில் இவை நீண்ட கால அளவு பகைவர்கள் அறியா வண்ணம் நீரில் மூழ்கி இருக்கும் திறன் கொண்டவை.
ஒரு பொருள் தன் எடையை விட அதிக எடையுடைய நீரை இடப்பெயர்ச்சி செய்தால் தான் அப்பொருள் நீரில் மிதக்கும். நீர்மூழ்கிக் கப்பல்கள் நேர்மறை மிதக்கும் தன்மை கொண்டவை. நீர்மூழ்கி கப்பல்களின் வடிவம் எவ்வித மாற்றமும் இன்றி நீரின் மேல்பகுதியில் மிதக்கும் வகையில் உருவாக்கப்படுகிறது. அதாவது நீர்மூழ்கிக் கப்பல்களின் எடை அது இடப்பெயர்ச்சி செய்யும் நீரின் எடையை விடக் குறைவு.
நீரில் மூழ்க நீர் மூழ்கிகள் தம் எடையைக் கூட்ட வேண்டும் அல்லது இடப்பெயற்சி செய்யும் நீரினைக் குறைத்தல் வேண்டும். தம் எடையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள, நீர் மூழ்கி கப்பல்கள் முதன்மை சரளைத் தொட்டிகளைப் பயன்படுத்துகின்றன. இவை நீரின் மேற்பரப்பில் மிதப்பதற்கு காற்றினாலும், நீரில் மூழ்குவதற்கு நீரினாலும் அடைக்கப்படுகின்றன.
இத்தொட்டிகளைத் தவிர சிறிய அளவில் ஆழத்தை அதிகப்படுத்தவும், குறைக்கவும் சிறிய அளவிலான ஆழக்கட்டுப்பாட்டு தொட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. வெளிச்சுவரின் கடினத்தன்மையைப் பொறுத்து நீர்மூழ்கிக் கலன்களின் மூழ்கும் ஆழம் மதிப்பிடப்படுகிறது . வெளிச்சுவர் எஃகினால் ஆனதாக இருப்பின், நீர் அழுத்தம் சுமார் நான்கு மெகா பாஸ்கல் அளவு வரையிலும், டைட்டானியமாய் இருப்பின் பத்து மெகா பாஸ்கல் அளவு வரையிலும் தாங்க கூடும்.
ஊடொலிக்கும்பா என்னும் கருவி நீர்மூழ்கிக் கப்பல்களின் நடமாட்டத்தைக் கண்டறிய பயன்படுத்தப்படுகிறது. இக்கருவி பொருள்களின் மீது மோதி திரும்பி வரும் ஒலியின் எதிரொலிகளைக் குறித்து அப்பொருள்களின் இருப்பிடம், திசைவேகம் ஆகியவற்றை அறிய வல்லது.
ராணுவ நீர்மூழ்கிக் கப்பல்கள் பல்வேறு தகவல் தொடர்பு சாதனங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. அவற்றில் ஒரு அமைப்பு விஎல்எப்( VLF) ரேடியோ ஆகும். நவீன நீர்மூழ்கிக் கப்பல்கள் தமது பாய் மரத்தில் இணைக்கப்பட்டுள்ள ரேடியோ தொடர்பு அலைக் கம்பத்தினை மட்டும் நீரின் மேற்பகுதியில் வெளிநீட்டி தகவல்களை வெகுதுரிதமாக வெடிப்பு ஒலிபரப்பு முறையில் வெளியிட வல்லவை. இதன் மூலம் பகைவர் கண்டறிவது வெகுவாக தவிர்க்கப்படுகின்றது. பிற நீர்மூழ்கிக் கப்பல்களுடன் தகவல் தொடர்பில் ஈடுபட ஜெர்டி ரூட் என்ற கருவி பயன்படுத்தப்படுகின்றது.
வாழ்வாதார அமைப்புகள்
அணுக்கருத்திறன் நீர்மூழ்கிக் கப்பல்கள் பல மாதங்கள் வரை நீருக்குள் மூழ்கி இருக்கும் திறன் வாய்ந்தவை . எனவே இக்கலன்களில் மனிதர்கள் நெடுங்காலம் தங்கி இருக்கத்தக்க வாழ்வாதாரங்களை நிறுவுதல் இன்றியமையாததாகின்றது. பல நவீன ராணுவ நீர்மூழ்கிக் கப்பல்களில் மின்னாற் பகுப்பு முறையில் நீரிலிருந்து சுவாசிக்கத் தகுந்த ஆக்சிஜன் பெறப்படுகிறது. நீர்மூழ்கிக் கப்பல்களில் உள்ள காற்றுக் கட்டுப்பாட்டு கருவி மூலம் தேவையற்ற CO2 வெளி நீக்கப்படுகிறது. காற்றுக் கட்டுப்பாட்டு கருவியில் உணர்கருவிகள் கப்பலின் பல பாகங்களில் பொருத்தப்பட்டு, காற்று மாதிரிகள் சோதனை செய்யப்படுகின்றன. குடிநீர் ஆவியாதல் முறையிலோ, எதிர் சவ்வூடு பரவல் முறையிலோ தயாரிக்கப்படுகிறது. இந்நீர் குளிக்க, குடிக்க, சமைக்க என பயன்படுத்தப்படுகிறது. கழிப்பிடங்களில் கடல் நீர் பயன்படுத்தப்படுகிறது.
இந்திய கடற்படையில் தற்போது 17 டீசல் ஆற்றல் கொண்ட நீர் மூழ்கி கப்பல்களும், ஐஎன்எஸ் அரிஹந்த் என்ற ஒரு அணுசக்தி ஆற்றல் கொண்ட பாலிஸ்டிக் ஏவுகணை நீர் மூழ்கி கப்பலும் உள்ளது. ஐஎன்எஸ் சிந்துகோஸ், சிந்துராஜ், சிந்துரத்னா, சிந்துகேசரி ,சிந்து கீர்த்தி ,சிந்து விஜய், சிந்துராஷ்ட்ரா, ஐஎன்எஸ் ஷிஷீமர், சங்குஸ், ஷால்கி, ஷங்குல், ஹரிஹந்த், கல்வாரி, கண்டேரி, கரன்ச் வேலா, வாஹிர், அரிகாட் ஆகியவை இவற்றின் பெயர்களாகும்.
இந்தியாவின் நீர்மூழ்கிக் கப்பல் படை கிழக்கு கடற்கரையில் உள்ள விசாகப்பட்டினம் மற்றும் மேற்குக் கடற்கரையில் உள்ள மும்பை ஆகிய இரண்டு இடங்களிலும் நிலை கொண்டுள்ளது. ஒன்று மும்பையிலிருந்து 500 கிலோ மீட்டத்திற்கு அமைந்துள்ள கார்வார் மற்றொன்று ஐ எம் எஸ் வர்ஷா எனப்படும் ரகசிய கப்பல் படை கடற்படை தளமாகும். இந்தியா சமீபத்தில் இரண்டு நீர் மூழ்கிக் கப்பல் தளங்களைக் கட்டியது. ஒன்று மும்பையிலிருந்து 500 கிலோ மீட்டர் தெற்கே அமைந்துள்ள கார்வார், மற்றொன்று ஐ. என். எஸ் வர்ஷா எனப்படும் ரகசிய கடற்படை தளம். இத்தளம் காக்கிநாடா அருகே கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ளது மற்றும் நீர் மூழ்கி கப்பல்களுக்கான நிலத்தடி தளங்களைக் கொண்டிருக்கும்.
2025 பிப்ரவரியில் இந்திய கடற்படை 6 புதிய டீசல் நீர்மூழ்கி கப்பல்களைக் கட்டுவதற்காக ஜெர்மன் பொறியியல் நிறுவனமான தைசென் குழுவுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. நீருக்குள் மூச்சடைக்கி நிலத்தில் பல உயிர்கள் மூச்சு விட பணி புரியும் கப்பல்களையும், கப்பற்படை வீரர்களையும் வாழ்த்துவோம்.
(சொ.மங்களேஸ்வரி, பட்டதாரி ஆசிரியை, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, கோவில்பட்டி)