World Sparrows day: சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து .. கொண்டாடி மகிழ்வோம் வாங்க!
- சொ. மங்களேஸ்வரி
"சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக் கண்டேனே செவ்வானம் கடலினிலே கலந்திடக் கண்டேனே"... என்று
பாடத் தோன்றுகின்றது.. ஏனெனில் இன்று சிட்டுக்குருவிகள் தினம்.
பள்ளிப் பருவ நாட்களிலே புதிய வீட்டில் புதுமனைப் புகுவிழா நடத்தி விடுப்பு எடுத்து வீட்டிலே இருந்த பொழுது இந்த குருவிகள் மண்ணை நீர் போல் பாவித்து உடலைச் சிலிர்த்து விளையாடும் விளையாட்டு இன்றளவும் ரசிக்கத்தக்க ஒரு ரசனையாக தொடர்கிறது எனக்கு. அதன் சந்தோஷத்தை காற்றில் ரம்யமாய் கலந்து காதுகளில் இன்னிசையாய் இழையோடியதையும் நினைவுகூர்ந்து....
சிட்டுக்குருவி என்பது நம் வீடுகள் மற்றும் அருகில் உள்ள மனித குடியிருப்புகளை ஒட்டி வாழும் ஒரு சிறிய பறவை என்பது நாம் அறிந்ததே. இவை அனைத்துண்ணிகள். தானியங்கள் மற்றும் பூச்சிகளை உணவாகக் கொள்கின்றன. 14 முதல் 18 சென்டிமீட்டர் வரை நீளம் கொண்ட, கூம்பு வடிவிலான அலகு உடைய குட்டையான வால் கொண்ட, 100 முதல் 150 கிராம் எடையுடைய ஒரு பறவை. பெண் குருவிகளை விட ஆண் குருவிகள் அடர் பழுப்பு நிறம் மற்றும் கருப்புத் தொண்டை பட்டை கொண்டவை. அதன் ஆயுள் காலம் சுமார் 13 ஆண்டுகள் ஆகும்.
மக்கள் வாழும் பகுதிகளில் பெரும்பாலும் வீடுகளில் சிறிய கூடுகளை அமைத்து, புழுக்கள், தானியங்கள் மற்றும் விதைகளை உண்டு வாழும் இவை கூடு கட்டும் அழகே அலாதியாய் இருக்கும். தன் அளவை விடப் பெரியதான புற்கள், நீளமான கயிறுகள் ஆகியவற்றைக்கூட கொண்டு வந்து வென்டிலேட்டர்களில் வைத்து அவை கீழே விழுந்தாலும் மனம் தளராது மீண்டும் மீண்டும் கொண்டு சேர்க்கும்.
சிட்டுக்குருவி வீட்டிற்கு வந்து தங்குவது அல்லது கூடு கட்டுவது வீட்டில் நிம்மதி மற்றும் மன அமைதி நிலைத்திருக்கும் என்பது நம்பிக்கை. மகாலட்சுமியின் அருளைப் பெற விரும்பாதோர் எவர்? இது வீட்டில் சுபகாரியங்கள் நடக்கவிருக்கிறது என்பதை முன்னறிவிப்பு செய்கின்றது என்றும், குடும்பம் வாழையடி வாழையாக தழைப்பதையும், குறிப்பதாகவும் பெரு நம்பிக்கை இருக்கின்றது.
அதேபோல் பலர் தங்கள் வீடுகளில் குருவிகளுக்காக அட்டைப் பெட்டிகளில் தொலையிட்டு தொங்கவிடுவதும் என் தகப்பனார் அவ்வாறு அடிக்கடி செய்வதும் எனக்கு ஞாபகம் வருகின்றது. அதில் இக்குருவிகள் முட்டையிட்டு, குஞ்சு பொரித்து, இனப்பெருக்கம் செய்யும். இவை ஒரு முறையில் மூன்று முதல் ஐந்து முட்டைகள் வரை இடும். அதன் முட்டை பச்சை கலந்த வெள்ளை நிறம் உள்ளதாக இருக்கும் சிட்டுக்குருவிகளில் மெல்லிய கோடுகளைக் கொண்ட புல் வெளிக் குருவிகள், மாலை சிட்டுகள், காட்டில் வாழும் நரிச் சிட்டுகள், வெண் கொண்டையும் வெண்மையான தொண்டையும் கொண்ட குருவிகள், கருப்பு சிட்டுகள், வீட்டு சிட்டுக்குருவி என பல வகைகள் உள்ளன. சங்க இலக்கியங்களில் இந்த ஊர் குருவி உள்ளுறை குரீஇ என்றும் மனையுறை குரீஇ என்றும் குறிப்பிடப்படுகின்றது. மதுரையில் இந்த குருவிக்காக ஒரு கோவிலைச் சுதந்திரப் போராட்ட வீரர் கோவிந்தசாமி என்பார் கட்டி உள்ளாராம்.
நகரமயமாக்கல், செல்போன் டவர், கதிர்வீச்சு மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்களால் இக்குருவிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகின்றது. இக்குருவியின் இனப்பெருக்க மண்டலத்தை அலைபேசியிலிருந்து வரும் நுண்ணலைகள் தாக்கி அவற்றை மலடாக மாற்றி விடுவதால், இவை தங்களின் இனப்பெருக்கத்தைச் செய்ய முடியவில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.
"சிட்டாய் பறப்பது என்னும் சொல் வேகமாக செயல்படுபவர்களை குறிக்கும் ". ஆம் தற்போது நாம் அச் சிட்டுக்களைப் பறக்க விட்டு விட்டோம். அலைபேசியை மட்டும் தடை செய்கின்றோம் என்று சொல்லிப் பாருங்கள் மனிதர்கள் அவ்விடம், ஏன் கண்டத்தை விட்டே சிட்டாய் பறந்து விடுவார்கள் போலும். இந்த இனத்தை அழியாமல் காக்க சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேண்டி, விரும்பி இத்தினத்தைக் கொண்டாடுகிறார்கள். இத்தினத்தில் சங்கீதக் கீச்சொலியைச் சுற்றுப்புறத்தில் ஒலிக்க விட்டு, சந்தோசம் பெருக்கிக் கொள்ள உறுதி கூறுவோம்.
(சொ. மங்களேஸ்வரி, பட்டதாரி ஆசிரியை, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கோவில்பட்டி, தூத்துக்குடி மாவட்டம்)