Chettinadu Recipe: தேன் போல தித்திக்கும்.. மாம்பழ குல்ஃபி ஐஸ்!
- மணிமா
செட்டிநாட்டு அடுப்படியின் ரெசிபிகளுக்கு ஆதரவு தரும் அன்பு உள்ளங்களுக்கு.. மணிமா..வின் அன்பு வணக்கங்கள் ..
இன்று அதிரடியாக மாம்பழ குல்ஃபி ஐஸ் நா ருசிக்க மனம் லயிக்க எளிய நான்கு பொருட்களைக் கொண்டு ஐந்தே நிமிடத்தில் தயார் செய்வோம். ஆனால் சுவைக்க எட்டு மணி நேரம் காத்திருக்க வேண்டும்
இரவு படுக்கப் போகும்போது தயாரித்து ஃப்ரீசரில் வைத்துவிட்டு காலையில் எடுத்துக் கொள்ளலாம். அல்லது காலை எழுந்த பிறகு தயாரித்து மதியம் சுவைக்கலாம். அதிரடியா உடனடியா செய்யலாம் வாங்க
தேவையானபொருட்கள்
நன்கு பழுத்த மாம்பழம் - ஒன்று
காய்ச்சி ஆற வைத்த பால் - 100.மி.லி
சீனி (அஸ்கா) - 5 ஸ்பூன்
ஒரு லிட்டர் பால் காய்ச்சி ஆற வைத்து ஃப்ரிட்ஜில் வைத்து அதன் மேல் ஆடையை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்
குல்ஃபி மோல்டு அல்லது...நான்கு டம்ளர் நான்கு ஐஸ் குச்சி
செய்முறை விளக்கம்
முதலில் மாம்பழத்தை கழுவி தோல் சீவி சிறு சிறு துண்டுகளாகி மிக்ஸியில் போட்டு கூழாக்கவும். கொட்டையை நீக்கி விடவும்.
பிறகு 100 மில்லி லிட்டர் பாலையும் 5 ஸ்பூன் சீனியையும் உள்ளே விட்டு திரும்ப ஒரு நிமிட நேரம் மிக்ஸியை ஓட விடவும்.
அடுத்து ஒரு லிட்டர் பால் ஏற்கனவே காய்ச்சி ஆற வைத்து ஃப்ரிட்ஜ்குள் வைத்திருக்கும் அதன் ஆடையை மட்டும் எடுத்து மிக்ஸிக்குள் சேர்க்கவும்.
பாலாடை சேர்த்தபின் (இதுதான் நமக்கு க்ரீம்) விட்டு விட்டு மிக்ஸியை இரண்டு நிமிடம் ஓடவிடவும். பார்க்க திரண்ட வெண்ணெய் போல் இருக்கும்
அவ்வளவே வேலை. உடனேயே குல்ஃபி மோல்டுக்குள் ஸ்பூனால் மாம்பழக் கலவையை எடுத்து நிரப்பி மூடி விடவும். நன்கு இரண்டு முறை குலுக்கி தட்டி மூடவும். அப்போதுதான் காற்று இடையே இருக்காது குச்சியில் இறுக்கி பிடித்துக் கொள்ளும் ..
வீட்டில் உள்ள டம்ளர்களில் கலவையை நிரப்பி நடுவில் ஐஸ் குச்சியை வைத்து அதன் மேல் பட்டர் பேப்பரோ பாலித்தீன் கவரோ நடுவில் ஒரு துளை செய்து குச்சி வெளியே நீட்டி இருக்குமாறு ஒரு ரப்பர் பேண்ட் போட்டு ஃப்ரீசரில் தண்ணீர் உள்ளே போய் விடாமல் இருப்பதற்கு ...தயார் செய்ததை எடுத்து ஃப்ரீசரில் வைத்து குறைந்தது ஆறு மணி நேரம் அதிகம் எட்டு மணி நேரம் ஆனபின் எடுத்து. குழாய் தண்ணீரில் அரை நிமிட நேரம் காண்பித்து விட்டு குச்சியை வைத்து லேசாக திருப்பி எடுத்தால் அழகான மாம்பழ ஐஸ் நம் கையில்
மயக்கும் மஞ்சள் நிறமும் .....ரசியுங்கள்
இனிக்கும் மாம்பழ குல்ஃபியும் ருசியுங்கள்
அடுத்த செட்டிநாட்டு ரெசிபியில் அனைவரும் கேட்டுக் கொண்டிருக்கும் ஒரு நான் வெஜ் ரெசிபி ஹோட்டல் ஸ்டைலில்
இப்போது தங்களிடமிருந்து அன்புடன் விடைபெறுகிறேன் என்றென்றும் அன்புடன் உங்கள் ...மணிமா ...