“என் பெயர் ராமசாமி".. மனிதம் மலர்கையில் – பகுதி 2
- தி. மீரா
அடுத்த நாள் காலையில் மீனாவுக்கு அந்த தாத்தா நினைவு மறையவே இல்லை.
“அம்மா, நம்ம வீட்டு முன்னாடி நேற்று இருந்த தாத்தா தெரியுமா?” என்று கேட்டாள்.
லட்சுமி சற்றுக் கவலைப்பட்டாள்.
“இப்போ காலம் நல்லதில்லைம்மா… எல்லாரையும் நம்பக் கூடாது,” என்றாலும், மீனாவின் நல்ல மனசை தெரிந்ததால் அவளை கண்டிக்கவில்லை.
பள்ளி முடிந்து வீடு திரும்பும் வழியில் மீனா மீண்டும் அந்த இடத்தைக் பார்த்தாள். தாத்தா அங்கேயே இருந்தார். இந்த முறை அவர் மிகவும் பலவீனமாகத் தெரிந்தார்.
மீனா அருகிலிருந்த கடையில் இருந்து தன் சேமிப்பு பணத்தில் ஒரு தேநீர், இரண்டு பிஸ்கட் வாங்கி கொடுத்தாள்.
“என் பெயர் மீனா தாத்தா. உங்க பெயர் என்ன?”
தாத்தா மெதுவாக சிரித்தார்.
“என் பெயர் ராமசாமி,” என்றார்.
அவர் மெதுவாக பேச ஆரம்பித்தார்.
ஒரு காலத்தில் அவர் ஒரு பள்ளி ஆசிரியர். மனைவியும் மகனும் இருந்தார்கள். ஆனால் குடும்பத்தில் ஏற்பட்ட சண்டைகளால் தனியாகி விட்டார். வயதும் உடல்நலமும் காரணமாக வேலை செய்ய முடியாமல் போயிற்று.
அந்த கதையை கேட்டு மீனாவின் மனம் கனிந்தது.
“தாத்தா, நீங்க சாப்பிடாமல் இருக்கக் கூடாது. நான் நாளையும் ஏதாவது கொண்டு வரேன்,” என்றாள்.
அன்று இரவு மீனா அம்மாவிடம் எல்லாம் சொன்னாள். லட்சுமி சற்றுநேரம் அமைதியாக இருந்தாள்.
“மீனா, நம்மளால பெரிய உதவி செய்ய முடியாது. ஆனா பசிக்கிறவருக்கு சாப்பாடு கொடுக்கலாம். அது போதும்,” என்றாள்.
அடுத்த நாள் முதல், லட்சுமி சிறிது உணவை தனியாக வைத்து, “இத தாத்தாவுக்கு கொண்டு போ,” என்று கொடுத்தாள்.
ஒரு வாரத்தில் ராமசாமி தாத்தாவின் உடல்நிலை சற்று மேம்பட்டது. அவர் மீனாவுக்கு பழைய கதைகள், நல்ல பழக்கங்கள், வாழ்க்கை பாடங்கள் சொல்ல ஆரம்பித்தார்.
மீனா கேட்டாள் நல்ல பழக்க வழக்கங்கள் தான் பெரிய ஆளாக வரவைக்குமா?.தாத்தா நான் தினமும் நீங்க சொல்றது செய்வேன். நானும் ஒரு நாள்பெரிய ஆள் ஆகனும். நல்ல படிச்சு.ஆவேனா தாத்தா?.
"நான் சொன்னது தினமும் கடைபிடிச்ச வாடா செல்லம். பணம் இருந்தா தான் செல்வம் இல்லம்மா… நல்ல மனசு இருந்தா தான் மனிதன் செல்வந்தன்,” என்றார் ஒருநாள்.
அந்த வார்த்தைகள் மீனாவின் மனதில் ஆழமாக பதிந்தது.
ஆனால் ஒரு மாலை… மீனா வழக்கம்போல் சென்றபோது அந்த இடம் காலியாக இருந்தது. தாத்தா எங்கும் தெரியவில்லை. அவள் இதயம் துடிக்க ஆரம்பித்தது.
“தாத்தா… தாத்தா…” என்று சுற்றி பார்த்தாள்.
அந்த நேரத்தில் அருகிலிருந்த மரத்தின் கீழ் ஒரு சிறிய காகிதம் கிடந்தது…
(தொடரும்…)
(ஈரோட்டைச் சேர்ந்த பாவலர் முனைவர் தி. மீரா, ஆசிரியர், தென்தமிழுக்காக கட்டுரைகள், கவிதைகள் படைத்து வருகிறார், கிரியேட்டிவ் எழுத்தாளர்)